டெல்லி செங்கோட்டை மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி நாட்டுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள், டெல்லி செங்கோட்டை மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர். இதில், 7-வது ராஜ்புதானா ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதி முகமது ஆரிப், டிசம்பர் 25-ம் தேதி கைது செய்யப்பட்டான். இவ்வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 2005 அக்டோபர் 24-ம் தேதி முகமது ஆரிப் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அக்டோபர் 31-ம் தேதி அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை 2007 செப்டம்பர் 13-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து, தனது தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான். இந்த மனுவை கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனினும், மீண்டும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தான். இதையும் 2011 ஆகஸ்ட் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேசமயம், மரண தண்டனை வழக்கில் தொடரப்படும் மறுசீராய்வு மனுக்கள் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, முகமது ஆரிப்பின் மறுசீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் 2016-ம் ஆண்டு முடிவு செய்தது. இதற்கு முன்பாக, அவனது மரண தண்டனைக்கு 2014-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில்தான், தன்னை குற்றவாளியாகக் கருதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகவும், தண்டனையை எதிர்த்தும் முகமது ஆரிப் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. அதாவது, இவனது மறு சீராய்வு மனுவை தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தீர்ப்பளித்த தலைமை நீதிபதி யு.யு.லலித், “மின்னணு பதிவுகளை ஆதாரமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எனினும், முழு விவகாரத்தை கருத்தில் கொண்டாலும், அவரது குற்றம் நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம். மறுசீராய்வு மனுவை ரத்து செய்கிறோம்” என்று கூறினார்.