டெல்லி கலவரத்தின்போது புலனாய்வுப் பிரிவு அதிகாரி அங்கித் ஷர்மாவை, 52 இடங்களில் கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்ய வழக்கில், முக்கியக் குற்றவாளியான மூசா குரேஷி, இரண்டரை ஆம்டுகளுக்குப் பிறகு தெலங்கானாவில் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
2019-ம் ஆண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் (சி.ஏ.ஏ.) கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, டெல்லியில் 2020 பிப்ரவரி மாதம் 25-ம் தேதி மிகப்பெரிய கலவரம் வெடித்தது. ஜாமா பள்ளிவாசல், ஷாகின் பாக்கில் நடந்த இக்கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கலவரத்தின்போது, அங்கித் ஷர்மா என்கிற புலனாய்வுப் பிரிவு அதிகாரியும் கொல்லப்பட்டார். அவரது உடல் சாந்த் பாக் பகுதியிலுள்ள கழிவுநீர் சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது. டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி 59-வது வார்டு கவுன்சிலர் தாகீர் ஹூசைன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் வைத்துத்தான் அங்கித் ஷர்மா கொல்லப்பட்டார்.
சாந்த்பாக் பகுதி நிலவரத்தை ஆராயச் சென்ற அங்கித் ஷர்மாவை, தாகீர் ஹூசைன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல், அங்கிருந்த ஒரு கட்டடத்துக்குள் இழுத்துச் சென்று சராமரியாக கத்தியால் குத்தியது. அவரை மீட்க முயன்றவர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் மற்றும் ஆசிட் பாட்டில்களையும் அந்தக் கும்பல் வீசியது. அங்கித் ஷர்மா இறந்த பிறகு கட்டடத்தின் அருகிலிருந்த சாக்கடைக்குள் அவரது உடலை வீசியிருக்கிறார்கள். பிரேதப் பரிசோதனையில், அங்கித் ஷர்மாவின் உடலில் 52 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. தங்கள் வாழ்நாளில் இப்படியொரு குரூரமான கொலையை பார்த்ததில்லை என்று அங்கித் ஷர்மாவுக்கு பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்தளவுக்கு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
இவரது கொலை வழக்கில் தாகீர் ஹூசைன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், முக்கியக் குற்றவாளியான மூசா குரேஷி தலைமறைவாகி விட்டான். அவனை போலீஸார் தேடி வந்தனர். இந்த சூழலில், மூசா தெலங்கானா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெலங்கானா விரைந்த தனிப்படை போலீஸார், நீண்ட நாட்களாக கண்காணித்து வந்தனர். இந்த சூழலில் நேற்று மூசா கைது செய்யப்பட்டிருக்கிறான். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு முக்கியக் குற்றவாளியை போலீஸார் கைது செய்திருக்கும் விவகாரம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.