பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இஸ்லாமிய வக்ஃப் திருத்த மசோதாவை கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தது. வக்ஃப் சட்டம், 1995 ஐ சட்ட திருத்தம் செய்து கொண்டு வரப்பட்ட புதிய மசோதாவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். சுமார் 40 க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன், வக்ஃப் வாரியங்களை நிர்வகிக்கும் சட்டமான வக்ஃப் சட்டத்தில் உள்ள பல ஷரத்துகளை ரத்து செய்ய இந்த மசோதா முன்மொழிந்துள்ளது.
மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்த மசோதாவானது மத அமைப்புகளின் செயல்பாட்டில் தலையிடும் நோக்கம் இல்லை என்றும், முஸ்லிம் சமூகத்தின் பின்தங்கிய மற்றும் ஏழைப் பிரிவினருக்கு இந்த மசோதா நீதி வழங்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.
இது குறித்து சட்டம் இயற்றும் அளவுக்கு மத்திய அரசுக்கு தகுதி உள்ளது என்றும், சச்சார் கமிட்டி மற்றும் முந்தைய அரசாங்கங்களால் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் பல்வேறு பரிந்துரைகளின்படி இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
வக்பு வாரியத்தின் செயல்பாட்டில் பல குறைபாடுகள் இருப்பதால் அதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும், முஸ்லிம் பெண்கள் மற்றும் ஓபிசி சமூகத்தினருக்கு முறையான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் வக்பு வாரியங்கள் தொடர்பாக சுமார் 12 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதுபோன்ற வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பதற்கு இந்த மசோதா வழிவகை செய்வதையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக ஒரு வருடத்தில் சுமார் 200 புகார்கள் வந்ததாக அவர் தெரிவித்தார். இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னர் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக அமைச்சர் வலியுறுத்தினார். மசோதாவின் விதிகளை எடுத்துரைத்த அவர், வக்ஃப் வாரிய தீர்ப்பாயத்தில், ஒரு நீதித்துறை மற்றும் ஒரு தொழில்நுட்ப உறுப்பினர் இருப்பார் என்று தெரிவித்தார்.
இந்த மசோதவை பல அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு அளித்துள்ளனர். இந்த நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்த பிரதமர் மோடி அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லி ஷியா இஸ்லாமிய அமைப்பினர் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவை சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். இதுதொடர்பான காணொளியை அமைச்சர் கிரண் ரிஜிஜு அவருடைய எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.