டெல்லி முண்டக் பகுதியின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு டெல்லியின் முண்டக் பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 3 மாடி கொண்ட வணிக வளாகம் ஒன்று இருக்கிறது. இந்த வணிக வளாகத்தின் முதல் தளத்தில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இக்கட்டடடத்தின் முதல் தளத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா மற்றும் வைபை தயாரிக்கும் அலுவலகத்தில்தான் முதலில் தீப்பற்றி இருக்கிறது. இத்தீ மளமளவென 3 தளங்களிலிலும் பரவியது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவில்லை. தகவலறிந்து சுமார் 24 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இச்சம்பவத்தில் வணிக வளாகத்தில் இருந்து இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், கட்டடத்தில் இருந்து சுமார் 60 முதல் 70 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதேசமயம், கட்டடத்தில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காரணம், விபத்து நிகழ்ந்தபோது கட்டடத்தின் 2-வது தளத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இங்குதான் அதிக உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இச்சம்பவம் தொடர்பாக, முதல் தளத்தில் சி.சி.டி.வி. கேமரா மற்றும் வைபை தாயாரிக்கும் நிறுவன உரிமையாளர்கள் ஹரீஷ் கோயல், வருண் கோயல் ஆகியோரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அதேபோல, கட்டடத்தில் தீத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படாததால் அக்கட்டடத்தின் உரிமையாளர் மனீஷ் லக்ராவையும் போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே, தீவிபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்திருப்பதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். ஜனாதிபதி தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் தனது இரங்கலை பதிவு செய்திருக்கிறார். மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார். இந்த மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.