இந்து முன்னணி சார்பில், கோயில்களை மட்டும் சீரழிக்கும் திமுக அரசை கோயிலை விட்டு வெளியேற வலியுறுத்தி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
ஹிந்து கோவில்களைச் சீரழிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், கோவில்களை விட்டு அறநிலையத் துறை வெளியேற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட 900 தொண்டர்களையும், மாநிலம் முழுவதும், மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களையும் திமுக அரசு கைது செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தொடர்ந்து ஹிந்து மத விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் திமுக அரசு, ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்கனவே அனுமதி பெற்றிருந்த நிலையில், நள்ளிரவில் அனுமதியை ரத்து செய்து, ஜனநாயக விரோதமாக நடந்து கொண்டிருக்கிறது.
திமுக அரசின் இந்த பாசிச நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது போன்று பாரபட்சமாக நடந்து கொள்வதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.