மக்களாட்சி திருவிழா தமிழகத்தில் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. இது மக்களின் வெற்றி, என்று இந்து முன்னணி பாராட்டு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
நேற்று நடந்து முடிந்த 18-வது பாராளுமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக 72.09% சதவீதம் மக்கள் வாக்களித்திருப்பது ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பறைசாற்றுகிறது. ஒவ்வொரு வாக்காளரும் பொறுப்புணர்ந்து தங்களது கடமையை செய்துள்ளது உண்மையில் வரவேற்கத்தக்க மாற்றம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழகம் தான் ஜனநாயத்தின் ஆணிவேர் என்பது சரித்திர உண்மை. இங்கு குடவோலை முறைமூலம் தேர்தல் நடந்ததை நாம் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். ஜனநாயகத்தை சரியாக நடத்தி செல்ல எத்தனை விதமான வழிகாட்டுதலை நம் முன்னோர்கள் செய்துள்ளனர் என்பது உத்தரமேரூர் கல்வெட்டு இன்றும் சாட்சியாக இருக்கிறது. நமது பாரத தேசம் உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமிதம் கொள்வோம்.
மேலும் 1950 ஆம் ஆண்டு நமது பாரதம் குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஒரே சட்டத்தில் இந்தியராக பிறந்த அனைவருக்கும் ஆண் பெண்,, படித்தவர் படிக்காத பாமரன், பணக்காரன் ஏழை என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் ஓட்டுரிமை உலகிலேயே அளித்தது நமது பாரதம் என்ற பெருமைக்குரியவர்கள் நாம். தேர்தலில் நூறு சதவீத வாக்கு செலுத்தப்பட வேண்டும் என்பது நமது லட்சியம். இதனை வலியுறுத்தி ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி கடந்த இரண்டு மாதங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டங்களையும் திண்ணை கூட்டங்களையும் நடத்தி வந்தோம். அதே போல தேர்தல் ஆணையமும் பல இடங்களில் வாக்கின் வலிமை என்ற விளம்பர பதாகைகளை வைத்து மக்களிடம் தேர்தல் திருவிழாவை குறித்து உத்வேகத்தை ஏற்படுத்தியது. அதேசமயம் தேர்தலில் சில இடங்களில் ஒட்டுமொத்தமாக வாக்குரிமை நீக்கப்பட்ட புகார்கள் வந்துள்ளன. அதுபோல் வாக்காளர் பதிவேடு சரியான முறையில் சீர்செய்வதில் அலட்சியம் காட்டப்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. தேர்தல் காலத்தில் மட்டுமே ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் உள்ளது. அதுவும்கூட மாநில அரசு ஊழியர்களைக் கொண்டே நிர்வாகம் செய்வதால் பல குளறுபடிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற குறைபாடுகளை தீர்க்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாக்காளர் அடையாள அட்டை உடன் ஆதார் எண் இணைக்கும் பணியை உரிய காலகெடுவிற்குள் செய்து முடித்தால் தான் நூறு சதவிகித வாக்கு பதிவை நோக்கி உண்மையாக செல்ல முடியும். இத்தனை குழப்பங்களும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் தமிழக மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை செலுத்தியதை இந்து முன்னணி சார்பில் மனதார பாராட்டுகிறோம். இவ்வாறு இந்து முன்னணி குறிப்பிட்டுள்ளது.