திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியாக முப்போகம் விளையும் நிலமான 3200 ஏக்கர் பூமியை தரிசு நிலம் என தவறாக வகைப்படுத்தி நிலம் கையகப்படுத்துவதாகவும் இதற்கு 9 கிராமங்களை சேர்ந்த 300க்கு மேற்பட்ட விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு செய்யாறு சிப்காட் அலுவலகத்திற்கு மனு கொடுக்க நடைபயணமாக செல்லும்போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதில் மூன்று விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். எங்கள் நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், செய்யாறு எம்எல்.ஏ., அமைச்சரிடம் மனு கொடுத்ததும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதிகாரிகள் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் 3200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 125 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுவரை விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசின் எந்த இயந்திரமும் செவிசாய்க்கவில்லை என்றாலும் இதுவரை 108 நபர்கள் மீது வழக்கு போட்டு உள்ளனர். அதில் பெண்களும் அடக்கம். மொத்தம் 11 வழக்குகள் இதுவரை விவசாயிகள் மீது பதிந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த திமுக அரசை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, நாளைய தினம் (18/11/2023), தமிழக பாஜக சார்பாக, தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.