கோவை லோக்சபா தொகுதியில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தோற்றிருந்தாலும் கூட, 492 பூத்களில், தி.மு.க., வேட்பாளரை விட, 44 ஆயிரத்து, 389 ஓட்டுகள் அதிகம் பெற்று, கவனம் ஈர்த்திருக்கிறார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட ஒரே காரணத்தால், தேசிய அளவில் கோவை தொகுதி முக்கியத்துவம் பெற்றிருந்தது. அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு, பலதரப்பிலும் இருந்தது.
பல்லடம், கவுண்டம்பாளையம், சூலுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புற ஓட்டுகள் தி.மு.க., கூட்டணிக்கு வலு சேர்த்ததால், ஒரு லட்சத்து, 18 ஆயிரத்து, 68 ஓட்டுகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோற்றார்.
இம்மூன்று தொகுதிகளில் மட்டும், 82 ஆயிரத்து, 784 ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு அதிகமாக பதிவாகியிருக்கின்றன. என்றாலும் கூட, வலுவான தி.மு.க., கூட்டணி மற்றும் அ.தி.மு.க., கூட்டணி என்கிற இரு அணிகளுக்கு இடையே, நான்கு லட்சத்து, 50 ஆயிரத்து, 132 ஓட்டுகள் பெற்று அண்ணாமலை இரண்டாமிடம் பெற்றிருக்கிறார். இது, 32.79 சதவீதம்.
ஏனெனில், 2019 தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற ஓட்டுகளை விட அதிகம். அத்தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியோடு, மூன்று லட்சத்து, 92 ஆயிரத்து, 7 ஓட்டுகளே பா.ஜ.,வுக்கு கிடைத்தன; இது, 31.47 சதவீதம்.
இதன்படி கணக்கிட்டால், 2019 தேர்தலை காட்டிலும், தற்போது, 1.32 சதவீத ஓட்டுகள் அண்ணாமலை கூடுதலாக பெற்றிருக்கிறார். இதன் காரணமாக, 17.23 சதவீத ஓட்டுகளே பெற்று, அ.தி.மு.க., மூன்றாம் இடத்துக்குச் சென்றிருக்கிறது.
அதாவது, 2014 தேர்தலில் தனித்து போட்டியிட்டு, 37.24 சதவீத ஓட்டுகளை அ.தி.மு.க., பெற்று, வெற்றி பெற்றது. இப்போது, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டும், சதவீதம் சரிந்திருக்கிறது.
2019ல் பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணன், மூன்று லட்சத்து, 92 ஆயிரத்து, 7 ஓட்டுகள் பெற்றிருந்தார். தற்போதைய கூட்டணி கட்சியான அ.ம.மு.க., வேட்பாளர் அப்பாதுரை, 38 ஆயிரத்து, 61 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
இதன்படி கணக்கிட்டால், நான்கு லட்சத்து, 30 ஆயிரத்து, 68 ஓட்டுகளே கிடைத்திருந்தது. இப்போது, நான்கு லட்சத்து, 50 ஆயிரத்து, 132 ஓட்டுகள் பெற்று, சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
தி.மு.க., கூட்டணியில். 2019ல் மா.கம்யூ., போட்டியிட்டது. அக்கட்சி வேட்பாளர் நடராஜன், ஐந்து லட்சத்து, 71 ஆயிரத்து, 150 ஓட்டுகள் பெற்றிருந்தார். இது, 45.85 சதவீதம். தற்போது அக்கூட்டணியில் ஒட்டிக்கொண்டுள்ள, மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மகேந்திரன், ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 104 ஓட்டுகள் பெற்றிருந்தார். இது, 11.65 சதவீதம்.
இதன்படி கணக்கிட்டால், ஏழு லட்சத்து, 16 ஆயிரத்து, 254 ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், தற்போது போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமார், ஐந்து லட்சத்து, 68 ஆயிரத்து, 200 ஓட்டுகளே பெற்றிருக்கிறார்.
41.39 சதவீத ஓட்டுகளே கிடைத்திருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தின் ஓட்டுகளை கணக்கிடாமல் ஆய்வு செய்தாலும், 2,950 ஓட்டுகள் குறைவு. பதிவான ஓட்டு அடிப்படையில், 4.46 சதவீத ஓட்டு குறைவு.
தெற்கு தொகுதி ஒப்பீடு
கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., போட்டியிட்டது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், 53 ஆயிரத்து, 209 ஓட்டுகள் பெற்றிருந்தார். தற்போது அ.தி.மு.க., கூட்டணி இல்லாமலேயே, 53 ஆயிரத்து, 579 ஓட்டுகளை அண்ணாமலை பெற்றிருக்கிறார்.
இதே தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், 42 ஆயிரத்து, 383 ஓட்டுகளே பெற்றிருந்தார். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், 51 ஆயிரத்து, 481 ஓட்டுகள் பெற்றார். இவ்விரு கட்சிகளும் தி.மு.க., கூட்டணியில் இருக்கின்றன. இதன்படி கணக்கிட்டால், 93 ஆயிரத்து, 864 ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க., 61 ஆயிரத்து, 929 ஓட்டுகளே பெற்றிருக்கிறது.
கோவை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகளை ஆய்வு செய்ததில், மொத்தமுள்ள, 2,048 பூத்களில், 492 பூத்களில் தி.மு.க.,வை விட, அண்ணாமலைக்கே அதிக ஓட்டு பதிவாகியிருக்கிறது. கோவை தெற்கு தொகுதியில், 128, வடக்கில், 105, சிங்காநல்லுாரில், 113, கவுண்டம்பாளையத்தில், 127, சூலுாரில், 83, பல்லடத்தில், 63 பூத்களில் பா.ஜ.,வுக்கு தி.மு.க.,வை விட அதிக ஓட்டு பதிவாகியுள்ளது.
இந்த பூத்களில் மட்டும் அண்ணாமலைக்கு, ஒரு லட்சத்து, 71 ஆயிரத்து, 741 ஓட்டுகள் விழுந்திருக்கின்றன. தி.மு.க.,வுக்கு ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 352 ஓட்டுகளே கிடைத்துள்ளன. தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை விட, 44 ஆயிரத்து, 389 ஓட்டுகள் அண்ணாமலை கூடுதலாக பெற்றிருப்பது, ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
அதாவது, தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளரான கார்த்திக் தொகுதியான சிங்காநல்லுாரில், மொத்தமுள்ள, 323 பூத்களில், 113 பூத்களில் பா.ஜ., முதலிடம் வந்திருக்கிறது. இத்தொகுதியில் மட்டும், 8,442 ஓட்டுகள் அண்ணாமலை அதிகம் பெற்றிருக்கிறார்.
இதேபோல், அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளரான, வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் தொகுதியான, கோவை வடக்கில் மட்டும், 105 பூத்களில் முதலிடம் பெற்று, 6,986 ஓட்டுகள் அதிகம் பெற்றிருக்கிறார்.
அ.தி.மு.க., புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரான, கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., அருண்குமார் தொகுதியான கவுண்டம்பாளையத்தில், 127 பூத்களில் முதலிடம் பெற்றிருப்பதோடு, 6,929 ஓட்டுகள் அண்ணாமலை அதிகம் பெற்றுள்ளார். சூலுார் தொகுதியில் 83 பூத்களில், 4,928 ஓட்டுகள், பல்லடத்தில், 63 பூத்களில், 3,068 ஓட்டுகள் அதிகமாக பெற்றிருக்கிறார்.
கவுண்டம்பாளையம், சூலுார், பல்லடம் ஆகிய மூன்று தொகுதிகளில் தி.மு.க., கூட்டணிக்கு கிராமப்புற மக்கள் பெருவாரியாக ஓட்டளித்திருக்கின்றனர். இத்தொகுதிகளில் மட்டும் தி.மு.க.,வுக்கு மூன்று லட்சத்து, 39 ஆயிரத்து, 167 ஓட்டுகள் கிடைத்திருக்கிறது. மகளிர் உரிமைத்தொகை, இலவச மகளிர் பஸ், கல்லுாரி மாணவியருக்கு மாதாந்திர உதவித்தொகை, வங்கி கல்வி கடன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியதை, அப்பகுதி மக்களிடம் தி.மு.க.,வினர் சேர்த்திருக்கின்றனர்.
அதேநேரம், மத்திய அரசால் செயல்படுத்தும் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகள் பட்டியலை, மாவட்ட நிர்வாகத்திடம் பா.ஜ.,வினர் கோரியிருந்தனர். அதை ‘பாலோஅப்’ செய்ய தவறியதோடு, மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை, நேரடியாக அணுகத் தவறி விட்டனர். இதன் காரணமாக, கிராமப்புற ஓட்டுகளை அண்ணாமலை இழந்திருக்கிறார்.
இருந்தாலும், நகர்ப்புறத்தில் வசிக்கும் வாக்காளர்கள், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக புதியவர்கள் வர வேண்டுமென்கிற எண்ணத்தில், அண்ணாமலையை தேர்வு செய்திருக்கின்றனர்.
நகர்ப்புறத்தில் அமைந்துள்ள கோவை தெற்கு (53,579), வடக்கு (71,174), சிங்காநல்லுார் (66,472) ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும் இவருக்கு, ஒரு லட்சத்து, 91 ஆயிரத்து, 225 ஓட்டு விழுந்திருக்கிறது.
அண்ணாமலையை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில், வலுவான கூட்டணி மற்றும் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின அமைப்புகளை ஒருங்கிணைத்து, தி.மு.க., வெற்றி பெற்றிருக்கிறது.
இது தேர்தல் தோல்வியாக இருந்தாலும், கோவை மக்களின் மனதில் அண்ணாமலை உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை.