தர்மபுரி அருகே கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, கிராம மக்கள் பாயசத்தில் விஷம் கலந்து குடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது வேப்பமரத்தூர் கிராமம். இங்கு, சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக, ஊர் தலைவர் துரை என்பவரின் தலைமையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக ஊர் மக்களிடம் தலைக்கட்டு வரி வசூலித்து வந்திருக்கிறார்கள். ஆனால், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்ததால், சுரேஷ் என்பவரது குடும்பத்தாரிடம் வரி வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சுரேஷ் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பொம்மிடி காவல் நிலைய போலீஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணை மேற்கொண்டனர். மேலும், வேப்பமரத்தூர் கிராமத்திலும் போலீஸார் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும், இப்பிரச்னை தொடர்பாக, தர்மபுரி தாசில்தார் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, நேற்று இரவு கோயில் முன்பு திரண்ட கிராம மக்கள், அங்கேயே அடுப்பு மூட்டி பாத்திரம் ஒன்றில் பாயசம் தயாரித்தனர்.
பின்னர், அந்த பாயசத்தில் பூச்சி மருந்துகளை கலந்து குடிக்கத் தொடங்கினர். இதைக் கண்ட போலீஸார் அதிர்ச்சியடைந்து பொதுமக்களை பாயசத்தை குடிக்க விடாமல் தடுத்தனர். எனினும், அதற்குள்ளாக 6 பேர் பாயசம் சாப்பிட்ட நிலையில், அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அதேசமயம், பாயசம் தயாரிப்பது முதல், விஷம் கலப்பது குடிப்பது, போலீஸார் தடுப்பது வரை அனைத்து காட்சிகளையும் கிராம மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்கில் பதிவேற்றம் செய்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.