திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழில் பேசி அசத்திய பாரத பிரதமர் மோடி, இசைஞானி இளையராஜாவுக்கும் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் சோழவந்தான் அருகே காந்தி கிராமத்தில், காந்தி கிராமிய பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது. இதன் 36-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பல்கலைக்கழகத்தில் 2018 – 19 மற்றும் 2019 – 20-ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர், பிரதமர் மோடி பேசுகையில், “ஊரக வளர்ச்சி என்ற மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையை புரிந்துகொள்வது முக்கியமானதாகும். மாண்புகள் மற்றும் நெறிமுறைகளுடன் ஒட்டுமொத்த வளர்ச்சியை அவர் விரும்பினார். காதி என்பதை கிராமங்களின் தற்சார்புக்கான கருவியாக மகாத்மா காந்தி பார்த்தார். அவரால் ஊக்கம்பெற்ற நாங்கள் தற்சார்பு இந்தியாவை நோக்கி பணியாற்றி வருகிறோம்.
மகாத்மா காந்தியின் ‘கிராமத்தின் ஆன்மா, நகரத்தின் வசதி’ (தமிழில் பேசினார்) என்பது தற்போதைய அரசின் கவனத்துக்குரிய பகுதியாக இருக்கிறது. நவீன அறிவியல், தொழில்நுட்பத்தின் பயன்கள் இன்று கிராமப் பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றன. இந்தியாவின் தொலைதூர பகுதிகளுக்கும் 6 லட்சம் கி.மீ. கண்ணாடி இழை கேபிள் சென்றடைந்திருக்கிறது. நகரப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது கிராமப் பகுதிகளில் இணையதளம் கூடுதல் வேகத்தோடு செயல்படுகிறது. பெண்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி. கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போரிட்ட முதல் மகாராணி வேலு நாச்சியார். அந்த வகையில், தமிழத்தில் பெண்கள் சக்தியின் தீவிரத்தை நான் காண்கிறேன். இளம்பெண்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பதை நான் காண்கிறேன்” என்றார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக, இசைஞானி இளையராஜாவுக்கு பிரதமர் மோடி கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். இதையொட்டி, இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வெள்ளை தொப்பி அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.