அட மூடர்களே, சொந்த ஜாதி மக்களையே கேடாக, தவறாக நீங்கள் வழிநடத்துகிறீர்கள். உன் ஜாதி புத்தி. உனக்கு கொள்கையும் ஏறாது, கோட்பாடும் ஏறாது என்று பா.ம.க. நிர்வாகி பற்றி திருமாவளவன் பேசியதற்கு, இயக்குனர் கௌதமன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் வரக்கூடாது என்று கூறி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய பா.ம.க. நிர்வாகி ஒருவர், உச்ச நீதிமன்றம் போனாலும் பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடமாட்டோம் என்று கூறினார். பின்னர், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், கோயிலை பூட்டுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “விழுப்புரம் மாவட்டம் மேல்பாதியில் பேசிய மூடன் ஒருவன், உச்ச நீதிமன்றத்துக்குப் போனாலும் விடமாட்டோம் என்று. என்ன பண்ணிடுவ நீ? அறிவுகெட்ட முண்டங்களே, சட்டம் தெளிவா இருக்கு. இந்திய அரசமைப்புச் சட்டம் தீண்டாமையை குற்றம் எனச் சொல்கிறது. இந்து அறநிலையச் சட்டம் கோயிலில் எல்லோரும் வழிபாடு நடத்த உரிமை இருக்கு எனச் சொல்கிறது.
நீ சமத்துவம் பேச வேண்டாம், சமூக நீதி பேச வேண்டாம். அதெல்லாம் உன் மண்டைல ஏறாது. உன் ஜாதி புத்தி அப்படி. உனக்கு கொள்கையும் ஏறாது, கோட்பாடும் ஏறாது. உச்ச நீதிமன்றம் போனாலும் விட மாட்டோம்னு சொன்னியே.. இப்ப கோயிலை பூட்டிட்டானே. இப்ப என்ன பண்ணுவ? பூட்ட பிடிச்சு ஆட்டப் போறியா? உன் வீட்டுக்கு உணவுப்பொருட்களை மூட்டையில் தூக்கி வருகிறானே.. அவன் தாழ்த்தப்பட்டவன்தானே. அது உனக்கு தீட்டாக தெரியவில்லையா? நீ சாப்பிடும் அரிசியை குத்திக்கொடுப்பவர்கள் இந்த சமூகத்து பெண்கள்தானே.. அப்போ உன் தீட்டு எங்க போச்சு?” என்று பேசியிருக்கிறார்.
இதற்குத்தான் இயக்குனர் கௌதமன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜாதிப்புத்தி என ஒரு சமூகத்தை இழிவு படுத்துவது ஒரு தலைவருக்கு அழகல்ல. திருமா தனது கருத்தை உடனே திரும்ப பெறவேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.