தென்மாவட்ட மழை, வெள்ளப் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் தமிழக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “தூத்துக்குடி போன்ற பகுதிகளில் 50 செ.மீ மழை என்பது தோராயமாக ஒருவருடத்துக்கு பெய்ய வேண்டிய மழை அளவு. அது ஒரேநாளில் பெய்ய மழைநீர் தேங்கி மக்கள் தவிக்கும் நிலை உருவானது.
டிசம்பர் 18-ம் தேதி காலையிலேயே தென்மாவட்ட மழை குறித்து எனக்கு தகவல் கிடைத்தது. அன்று மதியமே மத்திய உள்துறை துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நான்கு மாவட்டங்களுக்கும் பேரிடர் மீட்புப் படைகள் அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதற்கேற்ப உதவிகள் கிடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை நான் எக்ஸ் தளத்திலும் பதிவிட்டேன். உள்துறை அமைச்சகமும் செய்தி வெளியிட்டது. ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்றன. அனைத்துப் படைகள் மூலமாகவும் 21-ம் தேதி வரை 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதிகாரபூர்வ தகவலின்படி, 31 பேர் உயிரிழந்துள்ளனர். உடனடியாக மத்திய அரசு மீட்புப் பணியில் ஈடுபட்டாலும் இவ்வளவு பேர் உயிரிழந்தது என்பது வருத்தமளிக்க கூடிய விஷயம்.
மீட்புப் பணிகளை பொறுத்தவரை மத்திய அரசின் அனைத்து துறைகளும் ஒத்துழைத்து களத்தில் பணிபுரிந்தன. இதனால் தான் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த 800-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்வே சார்பில் மீட்கப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் மூலமாக தென்மாவட்ட மழை, வெள்ளம் குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த தொடர் கண்காணிப்பால் உடனுக்குடன் மீட்புப் பணிகள் நடைபெற்றன. இந்திய விமானப் படை, கடற்படை, கடலோர காவல்படைகளின் 9 ஹெலிகாப்டர் 70 முறை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
சாதாரணமாக ஒரு வெள்ளம் ஏற்படும்போது வெள்ள நீர் வடிந்த பிறகுதான் மத்திய அரசின் கணக்கெடுப்பு துறைகள் செல்லும். ஆனால், தென்மாவட்ட மழை வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் மத்திய அரசின் குழு 19-ம் தேதி மாலையே நிலைமையை கண்காணிக்க சென்றுவிட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை இவை அனைத்தும் 5,049 பேரை மீட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் இருந்தும், வெல்லிங்டனில் இருந்தும் ராணுவத்தின் படைப்பிரிவுகள் நான்கு மாவட்ட வெள்ள மீட்புப் பணிகளுக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டன. கடற்படையும் ஜெமினி படகுகளையும் நவீன ஹெலிகாப்டர்களையும் கொண்டு மீட்புப் பணிகளை செய்துள்ளன. இப்படியாக மத்திய அரசின் படைகள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கியதால் நிறைய பேரை மீட்க முடிந்தது.
ஒவ்வொரு வருடமும் மாநில பேரிடர் நிதிக்கு மத்திய பேரிடர் நிதியில் இருந்து பணம் வழங்குவது உண்டு. இந்த நிதியாண்டில் ரூ.813.15 கோடி தமிழக அரசிடம் இருந்துள்ளது. இந்த வருடத்துக்கு மாநில பேரிடர் நிதிக்கு மத்திய அரசு ரூ.900 கோடி கொடுக்க வேண்டியது. இதில் முதல் தவணையாக ரூ.450 கோடியை இந்த புயல் வருவதுக்கு முன்னதாகவே கொடுத்துவிட்டோம். இரண்டாவது தவணையாக மீதமுள்ள ரூ.450 கோடியை தென்மாவட்ட மழை வெள்ளம் ஏற்படும் முன்னதாகவே டிசம்பர் 12ம் தேதி கொடுத்துவிட்டோம்.
சென்னை வானிலை மையம் தென்மாவட்ட மழை குறித்து டிச.12ம் தேதியே தகவல் கொடுத்துள்ளது. அதிநவீன உபகரணங்கள் உள்ள மையம் சென்னை வானிலை மையம். அந்த மையத்தில் இருந்து தென்மாவட்ட வெள்ளம் ஏற்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகவே மாநில அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கை தகவல் கொடுக்கப்படவில்லை என்பது தவறு. இன்ச் பை இன்ச் இவ்வளவு மழை வரும் என்பதை கணித்துக் கூற முடியாது. இந்த முறை தனிப்பட்ட வகையில் நான் இதில் ஈடுபட்டேன். பிரதமரையும், அமித் ஷாவையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து தென்மாவட்ட வெள்ளம் குறித்து கோரிக்கை வைத்த உடனேயே என் முன்னால் மீட்புப் பணிக்கான அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.
வானிலை முன்னெச்சரிக்கை முறையாக வழங்கப்பட்டது. ஆனால், தென்மாவட்ட பொறுப்பு தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் எப்போது பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றனர்?. தேசிய பேரிடர் மீட்புப் படை செல்லும் முன் அவர்கள் அங்கு இல்லை. தேசிய பேரிடர் மீட்புப் படை சென்ற பிறகே தமிழக அமைச்சர்கள் தென்மாவட்டங்களுக்கு சென்றார்கள். கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை. மழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அதிகாரிகள் விரைந்து செயல்படவில்லை. கனமழை பெய்யும் என எச்சரித்த பின்னர் எடுக்கபட்ட நடவடிக்கை என்ன?. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு வானிலை மையம் மீது குற்றம் சாட்டுவது ஏன். சென்னையில் ரூ.4000 கோடி செலவிட்டு மழைநீர் வடிகால் அமைத்ததாக அமைச்சர் கூறினாரே. அப்போது 92% சதவீதம் வடிகால் பணிகளுக்கு செலவழித்தாக கூறிவிட்டு தற்போது மழை வெள்ளம் வந்ததும் அதே அமைச்சர் 42% தான் செலவழித்தோம் என மாற்றி பேசுகிறார்.
2015 வெள்ளத்துக்கு பிறகு கத்துகொண்ட பாடம் என்ன?. அதிலிருந்து எடுத்த நடவடிக்கைகள் என்ன?. தேசிய பேரிடர் மீட்புப் படையை டெல்லியில் இருந்து நாங்கள் தென்மாவட்டங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த சமயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இருந்தார். தென்மாவட்டங்களில் பேரிடர் ஏற்பட்ட சமயத்தில் முதல்வர் இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்று கொண்டிருந்தார்.” என்றார்.