இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத (மார்க்க) சம்மந்தமான பணிகளுக்கும் நல்ல நோக்கங்களுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அர்ப்பணிப்பதே வக்பு ஆகும். அரசு பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நலத்துறையின் கீழ் வக்பு வாரியம் செயல்படுகிறது.
இஸ்லாமியரின் மத (மார்க்க), சமூக மற்றும் பொருளாதார பணிகளுக்கு வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன. கல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள், பள்ளி வாசல்கள் மற்றும் அடக்க தளங்கள் (தர்கா)களுக்கும் வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு வக்பு அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வக்புக்கள் அங்கீகாரம் பெற்று உள்ளன.
மசூதிகள் மற்றும் வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடுகள் நடப்பதால் இதனை அரசே ஏற்று நடத்த வேண்டுமென இந்து முன்னணி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,
வக்ஃபு வாரியத்தை கலைத்திடு.!
அரசே ஏற்று நடத்திடு.!
வக்ஃபு வாரிய சொத்துக்களில் முறைகேடு செய்ததாக அமலாக்கத் துறையின் விசாரணையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானுல்லாகானுக்கு முன் ஜாமின் மறுத்துள்ளது நீதிமன்றம்.
பாரதம் முழுவதும் உள்ள மசூதி மற்றும் வக்ஃபு வாரிய சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படாமலும் வக்பு வாரிய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பொழுது பல்வேறு முறைகேடுகள் இருந்து வருகிறது.
அதனால் அனைத்து மசூதிகள் மற்றும் வக்பு வாரிய சொத்துக்களை அரசே ஏற்று நடத்த வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது…இவ்வாறு இந்து முன்னணி குறிப்பிட்டுள்ளது.