திமுக அரசு சமூக நீதியை நிலைநாட்டுவது போல் தம்பட்டம் அடித்து வருகின்றனர். இவர்களின் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை கொஞ்சம் பார்ப்போம்.
தருமபுரி சம்பவம் :-
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டி கிராமத்தில் யோகேஷ்வரன் என்பவர், யோகஷ் என்ற பெயரில் முடிதிருத்தம் கடை நடத்தி வருகிறார். இங்கு யோகேஷ்வரன், மற்றும் இவரது தந்தை கருப்பன் (எ) சின்னையன் இருவரும் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முடி திருத்தம் செய்ய, கடைக்கு சென்றுள்ளார். அப்போது நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தபோது, யோகேஷ்வரன், “நீ எந்த ஊரு?” என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த இளைஞர் தனது ஊரை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்பு கடையின் உரிமையாளர் யோகேஷ்வரன், “உங்களுக்கு முடி வெட்ட முடியாது, வேறு எங்கேயாவது வெட்டிக்கொள்” என்று திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த இளைஞர் தனது வீட்டிற்கு சென்று, தன் நண்பர்களிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். இதனையடுத்து நண்பர்கள் ஒன்றிணைந்து, முடி திருத்தும் கடைக்கு சென்று, “என்ன காரணத்திற்காக முடி வெட்ட முடியாது” என்று கடை உரிமையாளர் யோகேஷ்வரனிடம் கேட்டுள்ளனர். அப்போது யோகேஷ்வரன், “உங்களுக்கு (சமூகத்தை குறிப்பிட்டு பேசும் வகையில்) முடி வெட்ட முடியாது அவ்வளவுதான்” என்று சொல்லி வேறு ஒருவருக்கு முடிவெட்டிக் கொண்டே இருந்திருக்கிறார்.
பின்பு யோகேஷ்வரனின் தந்தை கருப்பன் (எ) சென்னையன், கடைக்கு வரும் பொழுது அவரிடமும் இளைஞர்கள் காரணத்தை கேட்டிருக்கிறார்கள். அப்போது, “உங்களுக்கு இப்போது மட்டுமல்ல, காலம் காலமாக முடி வெட்டுவதில்லை” தெரிவித்துள்ளார். அப்போது இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அவர், “இப்போதும் முடி வெட்ட முடியாது, எப்போதும் முடி வெட்ட முடியாது. நீங்க எங்கு சென்று புகார் செய்தாலும் அதை பற்றி கவலை இல்லை” என்று கூறியுள்ளார்.
அப்போது இளைஞர்கள் கருப்பன் (எ) சென்னையனை பார்த்து, “சமூக நீதி பேசக்கூடிய திமுகவில் இருக்கின்ற நீங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா, இதைதான் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், உள்ளிட்ட தலைவர்கள் கூறினார்களா?” என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டது.
சேலம் சம்பவம் :-
திமுக ஆட்சியில் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறுவது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சேலம் மாவட்டத்தில் திருமலைகிரி கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின இளைஞரை தி.மு.க. நிர்வாகி ஒருவர் மிகவும் கொச்சையாக “யாரு சொல்லிடா கோவிலுக்குள்ள வந்த? சொல்றா… ஊர்லயே இருக்க முடியாது, ஞாபகம் வச்சுக்க, பேத்துப்புடுவேன்” என்று சரமாரி திட்டிய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பட்டியலின இளைஞரை கோவிலுக்குள் அனுமதிக்காததுதான் திமுகவின் சமூக நீதியா ?
புதுக்கோட்டை சம்பவம் :-
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு வருடத்திற்கு மேலாகியும் குற்றவாளிகள் யாரையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை கண்டித்து அக்கிராம யாருமே ஓட்டு போடமல் தேர்தலை புறக்கணித்தனர். இதுபோன்று சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய போலீசாரால் முடியவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் பெரிய குற்றம் செய்துவிட்டதாக, பஞ்சு மிட்டாய் விற்பவர்களை கைது செய்வது, ரோட்டில் முட்டையை உடைத்து ஆம்லெட் போட்டவர்களை கைது செய்வது, கிளி ஜோசியம் சொல்பவர்களை கைது செய்வது. திமுக அரசு காவல் துறையினரை இப்படித்தான் கைப்பாவையாக வைத்துள்ளனர்.
சிதம்பரம் சம்பவம் :-
சிதம்பரம் தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருபவர் ராஜேஸ்வரி….. இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால், ஊராட்சி மன்றக் கூட்டங்கள் நடைபெறும்போதெல்லாம் தொடர்ந்து அவமதிக்கப்படுவது அரங்கேறி வந்தது. கடந்த ஆண்டு ஜுலை மாதம் 17ம் தேதி நடைபெற்ற ஊராட்சிக் கூட்டத்தில் ராஜேஸ்வரி, அவமதிக்கப்பட்டதோடு, இருக்கை வழங்காமல் தரையில் அமர வைக்கப்பட்ட கொடூரமும் அரங்கேறியது. தீண்டாமை கொடுமை ஊராட்சி மன்றக்கூட்டங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
திருப்பத்தூர் சம்பவம் :-
திருப்பத்தூர் மாவட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பெண், சாதிய பாகுபாட்டின் காரணமாக ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டும், இரண்டு ஆண்டுகளாக பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகியது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பட்டியல் இன பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வகையில் இடஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் 10% மட்டுமே இருக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியிடுவதற்கு அந்த ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், அந்த ஊரில் வசிக்கும் யாரும் தேர்தலில் போட்டியிடக்கூடாது எனவும், மீறினால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் எனவும் மிரட்டியதாகவும் அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். ஆனால், எதிர்ப்பையும் மீறி வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று, அந்த ஊரைச் சேர்ந்த இந்துமதி என்ற பெண் வேட்புமனு தாக்கல் செய்தார்.
“மனுத்தாக்கல் செய்ய போகும் வழிகளில் எல்லாம் ஆட்களை நிறுத்தி வைத்து அதிமுக நிர்வாகி சிவக்குமார் தரப்பு இந்துமதிக்கு இடையூறு ஏற்படுத்தினர். மேலும் மனுத்தாக்கல் செய்யக்கூடாது எனவும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
“நாங்கள் தேர்தலில் போட்டியிட்டதை ஊர் மக்கள் யாரும் தடுக்கவில்லை. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மட்டுமே அடியாட்களை வைத்து மிரட்டினார்,”என இந்திமதி தெரிவித்தார்.
எதிர்ப்பை மீறி இந்துமதி மனுத்தாக்கல் செய்த நிலையில், வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்து, இந்துமதியிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் வழங்கினார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் “முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் அவருடைய கூட்டாளிகள் அந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து, காவல்துறை சார்பாக எங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து இந்துமதி பதவி ஏற்பதற்கு முன்பாக வெற்றி பெற்றது செல்லாது என சிவக்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் அந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் பட்டியலின பெண்ணான இந்துமதி இன்று வரையில் பதவியில் அமர முடியவில்லை. திமுக தானே ஆட்சியில் உள்ளது, இதை எதிர்த்து அதிமுக நிர்வாகியை கண்டித்து பட்டியலின பெண்ணிற்கு நியாயத்தை வாங்கி கொடுத்திருக்கலாம்.
இதுதான் திமுக ஆட்சியின் லட்சணம். இவர்கள்தான் சமூக நீதியை நிலைநாட்ட போகிறார்களா ? இதுபோல் பல சம்பவங்களை சொல்ல முடியும். எதற்கெடுத்தாலும் சமத்துவம், சமூக நீதி என்று தான் திமுக அரசு பேசுகிறது. ஆனால், உண்மையிலேயே திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை. சமூக நீதியும் இல்லை. குடும்ப ஆட்சியும், ஊழலும் இருக்கும் இடத்தில் சமத்துவமும் இருக்காது. சமூக நீதியும் இருக்க முடியாது.