கூட்டணி, சிறுபான்மையினருக்கு தி.மு.க. ‘அல்வா!’

கூட்டணி, சிறுபான்மையினருக்கு தி.மு.க. ‘அல்வா!’

Share it if you like it

கூட்டணிக் கட்சிகளுக்கும், சிறுபான்மையினருக்கும் ஒரே நேரத்தில் தி.மு.க. அல்வா கொடுத்திருக்கும் விவகாரம், கடும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டிருப்பதோடு, சிறுபான்மையினர் ஓட்டுக்களும் சிதறும் சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடந்தது. இதற்கான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, எந்தெந்த கட்சிகள் எங்கெங்கு போட்டியிடுவது என்று தங்களுக்குள் முடிவு செய்து வைத்திருந்தன. குறிப்பாக, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய தலைமைக் கட்சிகளின் நிர்வாகிகள் தாங்கள் எங்கெங்கு போட்டியிடுவது, தங்களது கட்சியினரை எங்கெங்கு போட்டியிட வைப்பது என்று தீர்மானித்து, தங்களது கட்சித் தலைமைக்கும் அனுப்பி வைத்திருந்தனர். அதேபோல, கூட்டணிக் கட்சிகளும் தங்களது கூட்டணித் தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு திடீரென ஜனவரி 26-ம் தேதி வெளியானது. ஜனவரி 28-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும், பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு குறுகியகால இடைவெளி மட்டுமே இருந்ததால், கட்சிகள் அவசர அவசரமாக களத்தில் குதித்தன. இதில், அ.தி.மு.க. கூட்டணியில் கேட்ட இடம் கிடைக்காததால், பா.ஜ.க. தனித்து போட்டியிட்டது. அதேபோல, தி.மு.க.விலும் கூட்டணிக் கட்சிகளுக்கு கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை. எனினும், தி.மு.க. ஆளும் கட்சியாக இருப்பதாலும், கொடுத்த இடங்களில் வெற்றிபெற்றால் தங்களுக்கு மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி சேர்மன் பதவிகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையிலும், கிடைத்ததை வைத்து திருப்தியடைந்தனர். ஆனால், தங்களுக்கு சீட் கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் எல்லாம் தி.மு.க.வினர் சுயேட்சையாக போட்டியிட்டனர். இதனால், கூட்டணிக் கட்சியினர் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில்தான், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 22-ம் தேதி வெளியானது. இதில், தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அமோக வெற்றிபெற்றன. அதேசமயம், சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட தி.மு.க.வினரும் வெற்றிபெற்றிருந்தனர். எனினும், இவர்கள் மீண்டும் தி.மு.க.விலேயே இணைந்து விட்டதால், மொத்தமுள்ள 21 மாநகராட்சி மேயர் பதவியையும் தி.மு.க.வே கைப்பற்றியது. அதேபோல, 132 நகராட்சிகளையும், 435 பேரூராட்சிகளையும் கைப்பற்றியது. ஆகவே, தங்களுக்கு ஏதாவது ஒரு மாநகராட்சி மேயர் பதவியாவது ஒதுக்கப்படும் என்று கூட்டணிக் கட்சிகள் மிகவும் ஆவலுடன் இருந்தன. ஆனால், கும்பகோணம் மாநகராட்சியை மட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கிவிட்டு, மீதி அனைத்து மாநகராட்சி மேயர் பதவிகளையும் தி.மு.க.வே வைத்துக் கொண்டது. ஓரிரு நகராட்சி மற்றும் பேரூராட்சி சேர்மன் பதவிகளை மட்டும் பெயருக்கு கொடுத்து அல்வா கொடுத்து விட்டது. இதுதான் கூட்டணிக் கட்சிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

இதை நேரடியாக வெளிப்படுத்த முடியாத விடுதலைக் கட்சிகளின் தலைவர் திருமாவளவன், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முதல்வர் ஸ்டாலின் உத்தரவையும் மீறி, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.மு.க.வினரை, ராஜினாமா செய்ய வைத்து, கூட்டணி அறத்தை காக்க வேண்டும்’ என்று கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இதர கூட்டணிக் கட்சியினரும் ஸ்டாலினை நேரில் சந்தித்து இதே கோரிக்கையை முன்வைக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சியினரின் இக்கோரிக்கையை ஸ்டாலின் ஏற்க மறுக்கும் பட்சத்தில் கூட்டணியில் விரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தகவல்.

அதேபோல, சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் நாங்கள்தான் என்று மார்தட்டிக் கொள்ளும் தி.மு.க., மேயர் வேட்பாளர் பட்டியலில் சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களில் ஒருவர் பெயரைக்கூட அறிவிக்கவில்லை என்பதுதான் வேடிக்கை. துணை மேயர் பதவிக்கு மட்டும் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, சிறுபான்மையினரும் தி.மு.க. மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். இதனால், தி.மு.க.வுக்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மையினர் ஓட்டுக்கள் அடுத்த தேர்தலில் சிதறும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தி.மு.க. வெளியிட்ட மேயர், துணை மேயர் வேட்பாளர் பட்டியல்…


Share it if you like it