சேலம் கஜல் நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
முன்னதாக பாலக்காட்டிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக சேலம் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்த மோடி திறந்தவெளி வாகனத்தில் தொண்டர்களுக்கு கையசைத்தபடி மேடைக்கு வந்தார். அவரைக்கண்டதும் தொண்டர்கள் ’மோடி மோடி’ என கோஷம் எழுப்பினர்.
முன்னதாக மோடி , “பாரத் மாதாகி” என பேச்சை தொடங்கினார். ”பாரத அன்னை வாழ்க” என்று தமிழில் பேசத் தொடங்கிய அவர், ”என் அருமை தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்” எனவும் பேசினார்.
கோட்டை மாரியம்மன் குடியிருக்கும் புண்ணிய பூமியில் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பலமுறை தமிழ்நாடு வந்துள்ளேன். இந்த நல்ல வாய்ப்பு மீண்டும கிடைத்துள்ளது. தமிழகத்தில் பாஜக எனக்கும் கிடைக்கும் வரும் வரவேற்பை இந்தியா முழுக்க உற்றுப் பார்க்கிறது.இதைப் பற்றித்தான் நாடு முழுக்க பேச்சாக இருக்கிறது. கோவையில் மக்கள் கடல் போல திரண்டிருந்தார்கள். எனக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் கலைந்துவிட்டது.” என்றார்.
மேலும், “ஏப்ரல் 19-ந்தேதி ஒவ்வொரு வாக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் கிடைக்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள் உறுதி செய்து விட்டார்கள். வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த தமிழ்நாடு கிடைக்க எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற, இந்தியா வளர்ச்சியடைய, விவசாயி வளர்ச்சியடைய மீனவர்கள் பாதுகாக்க தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
இம்முறை 400க்கும் மேல் ஜூன் 4 என்று தமிழில் பேசியவர் மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தார். “வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டினை உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி பூண்டுள்ளது. அதற்கேற்ப எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. டாக்டர் ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை வளர்ச்சிடையந்த தமிழ்நாட்டினை உருவாக்க உதவும். இவர்கள் இணைந்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்து விட்டது.”
நான் பலமுறை சேலத்திற்கு வந்துள்ளேன். இம்முறை வந்தபோது. என்னுடைய பழைய ஞாபகங்கள் வருகிறது. 40 வருடங்களுக்கு முன்பு கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றபோது, சேலத்தில் இருந்து ரத்தினவேல் என்ற இளைஞர் வந்திருந்தார். சேலத்தின் பல பெருமைகளை அவர் சொல்லியிருந்தார். அதன் பிறகு சேலத்தின் மீதான என் ஈர்ப்பு அதிகரித்து விட்டது. சேலத்தில் ஒரு உணவகம் நடத்தி வந்தார். அவருடைய நினைவு எனக்கு வந்துவிட்டது.
திமுகவும் காங்கிரஸூம் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக உள்ளது. ஊழல், ஒரே குடும்ப ஆட்சி, இவர்கள் அதை தொடர்ந்து செய்து வருகின்றனர். அதனால் தான் காங்கிரஸ் வீட்டிற்கு போன பிறகு 5 ஜி தொழில்நுட்பம் வந்த்து. தமிழ்நாட்டில் திமுக 5 ஜி, அவர்களது 5-வத தலைமுறை ஆட்சிக்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் இதற்கு முன்பு 2ஜி ஊழல் மூலம் உலக அரங்கில் இந்தியாவை தலைகுனிய வைத்து விட்டனர். அவர்களின் ஊழலை சொல்ல ஒரு நாள் போதாது. தமிழகத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் நிதியளிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் இங்குள்ள அரசு அதில் எப்படி கொள்ளையடிக்கலாம் என திட்டம் போடுகிறது.