திகார் ஜெயில்ல வேணா திராவிட நாட்டை எழுதி பார்க்கலாம்: டாக்டர் கிருஷ்ணசாமி பொளேர்!

திகார் ஜெயில்ல வேணா திராவிட நாட்டை எழுதி பார்க்கலாம்: டாக்டர் கிருஷ்ணசாமி பொளேர்!

Share it if you like it

தனி தமிழ்நாடு கோரிக்கை விடுத்த தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராஜாவுக்கு, திகார் ஜெயிலில் வேண்டுமானால் திராவிட நாடு என்று எழுதிப் பார்த்துக் கொள்ளலாம் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பதிலடி கொடுத்திருக்கிறார்.

தி.மு.க.வை தொடங்கிய அண்ணாதுரை, அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்ற முழக்கத்தை முன்வைத்தார். ஆனால், காலப்போக்கில் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு, மாநில சுயாட்சி கோஷத்தை எழுப்பி வந்தார். இதன் பிறகு வந்த தலைவர்களும் மாநில சுயாட்சி கோரிக்கையையே பிரதானமாக வைத்து வருகின்றனர். இந்த சூழலில், மீண்டும் திராவிட நாடு கோரிக்கை எழுப்பி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா.

அதாவது, நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேட்டில் தி.மு.க. நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு கடந்த 3-ம் தேதி நடந்தது. இம்மாநாட்டில் பங்கேற்ற ஆ.ராசா, “தி.மு.க. தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது. ஆனால், எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருந்த பெரியார் சாகும்வரை தனித் தமிழ்நாடு கேட்டு போராடினார். அண்ணா வழியில் பயணிக்கும் எங்களை மீண்டும் தனித் தமிழ்நாடு கோரிக்கை எழுப்பி பெரியார் வழியில் செல்ல வைத்துவிடாதீர்கள். மாநில சுயாட்சி தரும்வரை நாங்கள் ஓயமாட்டோம்” என்றார். இதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில்தான், ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பதிலடி கொடுத்திருக்கிறார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் கிருஷ்ணசாமி, “1960-களிலேயே அண்ணாதுரை திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு விட்டார். தற்போது இவர்கள் மீண்டும் கிளப்புகிறார்கள். திராவிட நாடு என்பது சாத்தியமில்லாத ஒன்று. அது நடக்கவும் நடக்காது. வேண்டுமானால் திகார் ஜெயிலுக்குச் சென்று திராவிட நாடு என்று எழுதி வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம்” என்று ஆ.ராசாவுக்கு கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

மேலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திலேயே மக்களிடம் செல்வாக்கை இழந்து விட்டது. தவிர, இது மக்களுக்கான ஆட்சி அல்ல, ஒரு குடும்பத்துக்கான ஆட்சி என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள். ஆகவே, இழந்த செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்காக, இதுபோன்ற வெற்று கோஷங்களை எழுப்புகிறார்கள். இதை தி.மு.க. தலைமை கண்டிக்க வேண்டும். மேலும், இவ்வாறு தனிநாடு கோரிக்கை எழுப்புவது தேச விரோத செயலாகும். ஆகவே, சட்ட விதிகளை ஆராய்ந்து இது போன்று பேசுபவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.


Share it if you like it