நாங்கள் ஒன்றும் தி.மு.க. ஓட்டை வாங்கி வெற்றிபெறவில்லை. ஆகவே, ராஜினாமா செய்ய முடியாது என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள் போட்டி தி.மு.க.வினர். இதனால் செய்வதறியாது திகைத்துப்போய் நிற்கிறது அறிவாலயம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. அதேபோல, உள்ளாட்சித் தேர்தல் நடந்தும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இதனால், தி.மு.க.வினர் கடும் சோர்வடைந்திருந்தனர். இந்த சூழலில்தான், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து உற்சாகமடைந்த உ.பி.க்கள் சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து களமாடினர். இதிலும், தி.மு.க. அமோக வெற்றியை பதிவு செய்து ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், எம்.எல்.ஏ. கனவில் இருந்த பலருக்கும் சீட் கிடைக்கவில்லை. எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நோக்கி காய்நகர்த்தி வந்தார்கள்.
அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் வந்தது. ஆனால், இதிலும் பலருக்கு சீட் கிடைக்கவில்லை. எனவே, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் போட்டி வேட்பாளர்களாக களத்தில் குதித்தனர் தி.மு.க.வினர். இவர்களில் பெரும்பாலானோர் வெற்றியும் பெற்றுவிட்டனர். இதனால், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி வந்த நிலையில், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி சேர்மன் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடந்தது. இதிலும், தி.மு.க. தரப்பில் கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய பிரநிதித்துவம் கொடுக்கப்படவில்லை. அதோடு, கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவி இடங்களில் தி.மு.க.வினர் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.
இதையடுத்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கூட்டணி தர்மத்தை காப்பாற்றும் வகையில், போட்டி வேட்பாளர்களாக களத்தில் நின்று வெற்றிபெற்ற தி.மு.க.வினரை பதவி விலகச் சொல்ல வேண்டும் என்று முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, ஸ்டாலினும் போட்டி வேட்பாளர்கள் பதவி விலகிவிட்டு தன்னை வந்து சந்திக்கும்படியும், ராஜினாமா செய்யாதவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, ஒரு சில இடங்களில் மட்டும் போட்டி வெற்றி வேட்பாளர்கள் ராஜினாமா செய்தனர். ஆனால், பெரும்பாலான இடங்களில் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர். நாங்கள் ஒன்றும் தி.மு.க.வினரின் ஓட்டுக்களை வாங்கி வெற்றிபெறவில்லை. ஆகவே, ராஜினாமா செய்ய முடியாது என்று மறுத்துவிட்டனர். குறிப்பாக, கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் ஜெயந்தியின் கணவர் ராதாகிருஷ்ணன், பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று ஸ்டாலினுக்கு நேரடியாகவே பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன், துணை சேர்மன் பதவிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், 2 பதவிகளிலும் தி.மு.க.வினர் போட்டியிட்டு வெற்றிபெற்று விட்டனர். இதுதான் திருமாவளவனின் கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, ராதாகிருஷ்ணனின் துணிச்சலைக் கண்ட மற்ற மாவட்டங்ளிலுள்ள கவுன்சிலர்களும் ராஜினாமா செய்யும் முடிவை கைவிட்டு விட்டார்களாம். இதனால் என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்துப்போய் நிற்கிறது அறிவாலயம். அதேசமயம், பிள்ளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலைுயம் ஆட்டி விடுவது தி.மு.க.வுக்கு கைவந்த கலை என்பதால், அக்கட்சித் தலைமை பெயருக்கு கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, தி.மு.க.வினரையும் போட்டியிடச் செய்திருக்கலாம் என்கிற சந்தேகமும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆகவே, கூட்டணி டமாலாவது உறுதி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.