விழுப்புரத்தில் திமுக மாவட்ட கவுன்சிலரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த ஆ.கூடலூர் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் சாந்தி. கடந்த 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது இரவு வாக்குச்சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் சாந்தி உணவு வழங்கியுள்ளார். அப்போது தான் வாங்கி வந்த உணவை சாந்தி எடுத்து கொடுத்து விட்டதாக கூறி, திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி கிராம நிர்வாக அலுவலர் சாந்தியை கன்னத்தில் அறைந்து, தகாத வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த அதிகாரிகளும் தடுத்துள்ளனர்.
பிறகு அங்கிருந்து சென்ற ராஜீவ்காந்தி வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்ட பிறகு மதுபோதையில் இரவு பத்து மணிக்கு மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்து, கிராம நிர்வாக அலுவலர் சாந்தியை தலையை முடியை பிடித்து இழுத்து சென்று வயிற்றிலேயே எட்டி உதைத்ததாகவும் அந்த ஊர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், வலியால் துடித்த கிராம நிர்வாக அலுவலர் சாந்தி சிறிது தூரம் நடந்து சென்று மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சாந்தி கானை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல், அந்த கிராம மக்களும் தனியாக ஒரு புகார் மனு எழுதி காவல்துறையினரிடம் கொடுத்துள்ளனர்.
காவல்துறை வழக்கு பதிவு செய்தது தெரிந்ததும் திமுக மாவட்ட கவுன்சிலர் தலைமறைவானார். காவல்துறையினர் தலைமறைவாக இருந்த ராஜீவ் காந்தியை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை ராஜீவ்காந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.