தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி : போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் !

தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி : போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் !

Share it if you like it

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பாலவிடுதி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த மகாராஜா என்பவர் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மகாராஜா தன்னுடைய டீக்கடையை விரிவுபடுத்தவும், குடும்பத் தேவைக்காகவும் கடவூர் தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் திருவேங்கடம் என்பவரிடம் ரூ.2.5 லட்சம் கடனாகப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

வாங்கிய கடனுக்கு சரியாக வட்டி பணம் கட்டி வந்தும் அதிக பணத்தினை கேட்டு திமுக பிரமுகர் திருவேங்கடம் மகாராஜாவை மிரட்டியுள்ளார். இதனால் திருவேங்கடத்தின் மிரட்டல் காரணமாக, ஏழு லட்சம் ரூபாய் வரை வாங்கிய கடனுக்காக பணத்தினை திரும்ப செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. வாங்கிய அசல் தொகையை விட அதிக பணம் கொடுத்தும் மீண்டும் கூடுதல் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் திருவேங்கடம். இதற்கு மகாராஜா மறுப்பு தெரிவித்த நிலையில், அவரின் தந்தையை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டதாகவும் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இது சம்பந்தமாக பாலவிடுதி காவல் நிலையத்தில் மகாராஜா புகார் அளித்த நிலையில், மகாராஜாவை, திருவேங்கடம் மற்றும் அவரது அடியார்கள் மிரட்டி மொத்தமாக 32 லட்சத்து 69 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும் என மீண்டும் மிரட்டி உள்ளனர். இதனால், டீக்கடையை மூடிவிட்டு, குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி அலுவலகம் ஆகியவற்றில், ஆடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். இருப்பினும் அவர்களும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது முறையாக மகாராஜா தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து, மனு அளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மகாராஜா கூறுகையில், “திருவேங்கடம், தன்னை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, கந்துவட்டி செலுத்தாவிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டும் ஆடியோவை காவல்துறையிடம் வழங்கியும், நடவடிக்கை எடுக்காமல் காவல் நிலையத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர்.

மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் நான்கு நபர்களை வைத்து பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்குகின்றனர். எனவே தனது குடும்பத்தாருக்கும் தனக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் திருவேங்கடம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதை தொடர்ந்து அவரது மனைவி நந்தினி கூறுகையில், “தனது கணவர் பெற்ற கடனுக்காக வீட்டை அடமானம் வைத்து 7 லட்சம் ரூபாய் செலுத்திய பிறகும் தொடர்ந்து திருவேங்கடம் மற்றும் அவரது ஆட்கள் பணம் கொடுக்காவிட்டால் டீக்கடை நடத்த விட மாட்டோம் என கூறி வருகின்றார். மேலும் குடியிருக்கும் வீட்டை எழுதிக் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர். இன்னும் ஒரு வாரக் காலத்தில் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளா விட்டால், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலே குடும்பத்துடன் நாங்கள் தீக்குளிப்போம் என்று கண்ணீருடன் தெரிவித்தனர். இந்த சம்பவமானது அப்ப்குதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *