சிவகங்கை மாவட்டம் சித்தலூரைச் சேர்ந்த தி.மு.க. மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் முருகன் என்பவர் பெருங்குடி ஊராட்சியில் பத்து லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை செய்து வந்துள்ளதாகவும், இதனை தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தற்போது முடிவடைந்து விட்டதாக கூறி 10 லட்ச ரூபாய் பில்லை அனுமதிக்கும் படி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு கிருஷ்ணகுமாரி பணி அனுமதி உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகி முருகன் அங்கிருந்த இரும்பு நாற்காலியை எடுத்து கிருஷ்ணகுமாரியை ஆக்ரோஷமாக அடிக்க பாய்ந்துள்ளார்.
இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரியை தாக்க முயன்ற திமுக பிரமுகர் முருகனை கைது செய்ய வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரி கூறுகையில், திமுக பிரமுகர் முருகன் ஒப்பந்ததாரரே கிடையாது. மேலும் டெண்டரே விடாத நிலையில் வேலை முடிந்து விட்டது என்று கூறி பில்லை தருமாறு கேட்டு மிரட்டினார். ஒப்பந்ததாரராக இல்லாத அவர் எப்படி பணியை மேற்கொண்டார், எவ்வாறு அவர் பில்லை கேட்கலாம் என்று கூறினார்.
திமுக பிரமுகர் முருகன் அரசு அதிகாரியை தாக்க முயற்சிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.