துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களை சந்திக்காமல் முதல்வரும் அவரது புதல்வரும் நடந்து கொள்ளும் விதம் பொதுமக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம், அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த சனிக்கிழமை 6 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்பொழுது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்கள் பாறை குவியலுக்குள் சிக்கி கொண்டனர். இதையடுத்து, அடுத்த நாள் காலை (ஞாயிறு) முருகன், விஜய் என இருவர் உயிரோடு பத்திரமாக தீயணைப்பு துறை வீரர்களால் மீட்கப்பட்டனர். அன்று மாலையில் மீட்கப்பட்ட மூன்றாம் நபர் செல்வம் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த குழந்தை சுஜீத் ஆழ்துளை கிணற்றில் விழந்த பொழுது அலறி அடித்து கொண்டு ஓடியவர்கள் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தி.மு.க எம்பி கனிமொழி மற்றும் உதயநிதி என்பதை தமிழகம் நன்கு அறியும்.
அந்தவகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு, அவர் நடந்து கொள்ளும் விதம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கல்குவாரியில் இறந்தவர்களின் குடும்பத்தை இன்று வரை தமிழக முதல்வர் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. குறிப்பாக, தனது அன்பு மகனும் சேப்பாக்க எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நடித்த ”நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்திற்கு முதல்வர் அதிக முக்கியத்துவம் வழங்கியது கொடுமையிலும் கொடுமை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
அதே போல, மலை வாழ் மக்களுடன் முதல்வர் நடனம் ஆடும் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. கடும் துயரத்தில் உள்ள மக்களை சந்திக்காமல் ஆடி பாட வேண்டிய நேரமா? இது முதல்வரே என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, கடந்த 19.4.2022 அன்று பட்டியல் சமூகத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் காவல்துறை விசாரணையில் மரணமடைந்தார். தனது அண்ணனின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது தம்பிகள் கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இதுதவிர, விக்னேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், காவல்துறையினர் அடித்தே கொன்று விட்டதாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டிய சம்பவம் தமிழக மக்களிடையே இன்று வரை பேசுபொருளாக உள்ளது.
அண்ணனை இழந்து தவித்து வரும் விக்னேஷ் தம்பிகளை சந்தித்து ஆறுதல் கூறாமல், நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெளியிட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.