மூலபத்திரம் எங்கே? என்ற போஸ்டர் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவர், நடிகர் தனுஷை வைத்து இயக்கிய படம் தான் ’அசுரன்’. இப்படம், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று இருந்தது. இப்படத்தினை, திரையரங்கிற்கு சென்று தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பார்த்தார். இதையடுத்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அசுரன்- படம் மட்டுமல்ல பாடம்!
பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை -களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷ்-க்கும் எனது பாராட்டுக்கள் என தெரிவித்து இருந்தார்.
தி.மு.க. தலைவர் தெரிவித்து இருந்த கருத்திற்கு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,
பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் – ஆஹா… அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்! என கூறியிருந்தார்.
டாக்டர் – ராமதாஸ் தெரிவித்து இருந்த கருத்திற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, நாங்கள் மூலபத்திரத்தை விரைவில் வெளியிடுவோம் என தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்று 17 மாதங்களை கடந்து விட்டது. இன்றுவரை தி.மு.க. தனது மூலபத்திரத்தின் நகலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில் தான், பஞ்சமி நிலமான முரசொலி அலுவலகத்தின் மூலபத்திரம் எங்கே? என்ற போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.