விளையாட்டுதுறை அமைச்சர் முன்பு முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன் ஆவேசமாக பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
2023-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடரை இந்தியா நடத்து உள்ளது. அந்த வகையில், இப்போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ரூர்கேலாவில் எதிர்வரும் ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.
அந்தவகையில், உலகக் கோப்பை டிராபி மும்பையிலிருந்து விமானம் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தடைந்தது. இந்த டிராபிக்கு சென்னை விமான நிலையத்தில் ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் தமிழ்நாடு ஹாக்கி சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்புக் கொடுத்தனர். தொடர்ந்து, உலகக் கோப்பை டிராபியை ஊர்வலமாக எடுத்துச் சென்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோரை சந்தித்து டிராபியை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அதன்பின்னர், மாலை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் உதயநிதி தலைமையில் கோப்பை வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில்தான் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்த ஹாக்கி கேப்டன் உள்ளிட்ட வீரர்கள் அவமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
அதாவது, ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை டிராபி வெளியீட்டு விழாவில், 1980-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்த இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ‘தங்கமகன்’ வாசுதேவன் பாஸ்கரனும் கலந்து கொண்டார். ஆனால், மேடையின் முன்வரிசையில் அமைச்சர்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட 8 பேருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
அதேசமயம், தங்கமகன் வாசுதேவன் பாஸ்கரன் உள்ளிட்ட ஓய்வுபெற்ற ஹாக்கி வீரர்களுக்கு 2-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இது தங்கமகனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே, விழா ஏற்பாட்டாளர்களை அழைத்து தங்கமகன், தனது கோவத்தை வெளிப்படுத்தினார். மேலும், அமைச்சர் உதயநிதியிடம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.