விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யாமல் அடம் பிடித்த தி.மு.க.விற்கு அண்ணாமலை கொடுத்த அடியின் காரணமாக தற்போது ஆளும் கட்சி இறங்கி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த டிச.,23 – ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தாவது ; “விவசாய பெருங்குடி மக்களுக்கு உழவர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சென்ற ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு என்ற பெயரில் உருகிய வெல்லம், பல்லி இருந்த புளி, பருத்திக்கொட்டை கலந்த மிளகு என்ற பொங்கல் தொகுப்பை வழங்கியது தி.மு.க. அரசு. மக்களின் ஆரோக்கிய நலனை கருத்தில் கொண்டு சென்ற வருடம் வழங்கப்பட்ட தரமற்ற பொங்கல் பரிசை இந்த ஆண்டு தவிர்த்தமைக்கு பொதுமக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஆட்சிக்கு வந்தால் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ .4000 ஆதார விலையாக வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்த தி.மு.க. அரசு, அந்த வாக்குறுதியை மறந்ததோடு மட்டுமல்லாது பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க மறுத்திருப்பது தேசிய உழவர் தினமான இன்று விவசாய பெருங்குடி மக்களுக்கு தி.மு.க. கொடுத்துள்ள மிகப்பெரிய பரிசு. அரசு கொள்முதலை எதிர்நோக்கி இருந்த விவசாயிகளின் நிலை குறித்து தி.மு.க.வுக்கு என்ன கவலை? சிவப்பு கம்பளம் விரித்து வயலில் நடந்த கூட்டத்திற்கு விவசாயியின் வலி என்ன தெரியும்? என்று காட்டமாக கூறியிருந்தார்.
அண்ணாமலையின் கருத்தை தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என பலர் விடியல் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கினர். மேலும், திறனற்ற தி.மு.க. அரசுக்கு எதிராக விவசாய பெருமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்கப்படும் என தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது. இது, தமிழக பா.ஜ.க.விற்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கூறி வருகின்றனர்.