குப்பை வண்டியில் பொங்கல் தொகுப்பு அள்ளி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உலக தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகையாக இருப்பது பொங்கல் பண்டிகை. இந்த, பண்டிகையையொட்டி ரேஷன் கடையின் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில், பல்லி கிடந்த புளி, வண்டு கலந்த அரசி, புழு நெளிந்த ரவை, பாம்பு, தேள் தவிர்த்து மற்ற விஷ ஜந்துக்கள் தனது பந்துக்களுடன் குடும்பம் நடத்திய நிகழ்வினை யாரும் மறந்திருக்க முடியாது.
இப்படிப்பட்ட சூழலில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ. 1000 பணம், ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ அரிசி, முழு கரும்பு மற்றும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள வேட்டி, சேலைகள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கத்தில் இருந்து, நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு வேண்டிய வேட்டி, சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில், கொடுமை என்னவென்றால், அந்த பொருட்கள் அனைத்தும் குப்பை அள்ளும் டிராக்டரில் அள்ளி சென்ற சம்பவம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.