காவல்துறையின் விசாரணையில் மரணமடைந்த தங்கமணியின் உடலில் காயங்கள் இருப்பதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க ஆட்சியில் லாக்கப் மரணங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனிடையே, மரணம் அடைந்த நபர்களின் உடற்கூறு ஆய்வு குறித்த பகீர் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், லாக்கப்பில் மரணமடைந்த விக்னேஷ் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கூறியதாவது; காலை உணவுக்கு பிறகு விக்னேஷ்க்கு வாந்தி, வலிப்பு வந்திருக்கிறது. மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் கொண்டு சென்ற பொழுது விக்னேஷ் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டார் என்று மருத்துவர்கள் கூறியதை மேற்கொள் காட்டி முதல்வர் அவையில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், விக்னேஷ் உடற்கூறு ஆய்வு அறிக்கை கூறுவது; அவரின் உடலில் 13 இடங்களில் காயம், மற்றும் ரத்தக் கட்டுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், லத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கிய அடையாளங்களும், தலையில் ஒரு அங்குலம் அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல் அம்பலமாகியுள்ளது.
இதனிடையே, தமிழ் மின்ட் இணையதள ஊடகத்திற்கு விக்னேஷ் தம்பிகள் உருக்கமுடன் பேசிய காணொளி கல்நெஞ்சையும் கரைய வைப்பது போல் இருந்தது. அதில் ஒரு தம்பி கூறியதாவது; என் அண்ணன் முகத்தை பார்த்த பொழுது, அவரின் வாய் கிழிந்த நிலையில் இருந்தது. இது எல்லாம் ரொம்ப தப்பு. ஒரு ஏழை இப்படி பண்றீங்க… அதுவே ஒரு பணக்காரன் காரில் வந்திருந்தால் இப்படி செய்து இருப்பீர்களா என கண்ணீருடன் கேள்வி எழுப்பிய காணொளி தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
விக்னேஷ் உடற்கூறு ஆய்வு அறிக்கை கூறுவது வேறுவிதமாகவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கூறுவது வேறு விதமாகவும் இருப்பதை இதன் மூலம் அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். யாரை காப்பாற்ற முதல்வர் இப்படி பொய் சொல்லுகிறார் என பொதுமக்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் வரை தமிழக அரசிற்கு தொடர்ந்து கேள்விமேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தங்கமணி என்பவர் காவல்துறையின் விசாரணையின் பொழுது சமீபத்தில் மரணமடைந்தார். இந்நிலையில், சிறையில் இறந்த தங்கமணியின் உடலில் காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவர் காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்தனர். அப்பொழுது, எடப்பாடி அரசை தி.மு.க எம்.பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தற்பொழுதைய முதல்வருமான ஸ்டாலின், தி.மு.க ஊடகங்கள் மற்றும் அடிமை ஊடகங்கள், பத்திரிக்கைகள், ஊடக நெறியாளர்கள் எப்படியெல்லாம் கதறி இருந்தனர். இப்பொழுது மட்டும் ஏன்? விக்னேஷ் மரணத்தை மூடி மறைக்க முயல்கின்றனர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.