காமராஜருக்கு சமாதி கட்டியவர்கள் நாங்கள் தான் என தி.மு.க. முன்னாள் எம்.பி. ஆர்.எஸ். பாரதி பேசிய காணொளி ஒன்று தற்போது பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க. மற்றும் சில உதிரி கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகின்றன. அந்த வகையில், இந்த கூட்டணி கடந்த 2021 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். தனிப்பெரும்பான்மையுடன், தி.மு.க. ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. இதன்காரணமாக, தங்களது விருப்பபடி தி.மு.க. ஆட்சியை நடத்தி வருகிறது.
இதனிடையே, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரித்து வருகிறது. ஆளும் கட்சியில், நடக்கும் அவலங்களை கண்டிக்க வேண்டிய கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ந்து வாய்மூடி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். ஆட்டை கடித்து மாட்டை கடித்த கதையாக, தற்போது கூட்டணி கட்சியையும் தி.மு.க.வினர் விமர்சனம் செய்ய துவங்கி இருக்கின்றனர்.
அதனை மெய்ப்பிக்கும் விதமாக, தி.மு.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசியதாவது; நம்மை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்பது குறித்து நான் பட்டியலிட்டு காட்ட விரும்பவில்லை. பெரும் தலைவர் காமராஜர் தி.மு.க.வினரின் கட்டை விரலை வெட்டுவேன் என கூறினார். அவருக்கு கல்லறை கட்டியதே நாம் தான் என ஆணவத்துடன் பேசியிருக்கிறார்.
ஆர்.எஸ். பாரதியின் பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காமராஜரின் புகழை வைத்து கட்சி நடத்தி வரும் காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க. தலைவரின் அருவருக்கதக்க பேச்சை கண்டிக்க முன்வரவில்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.