இலவச பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் டிக்கெட்டிற்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் என சுற்றறிக்கை அனுப்பபட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2021 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க. அள்ளி வீசியது. இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். விடியல் அரசு அமைந்து ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளது. இதனிடையே, தி.மு.க. கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் இன்று வரை முழுமையாக நிறைவேற்றபடவில்லை என்பதே கசப்பான உண்மை.
இதனிடையே சென்னை கலைஞர் நகர், தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா விளக்கப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்ட போது இவ்வாறு கூறினார்; உங்களுக்கு எல்லாம் ரூ. 4,000 ஆயிரம் கொடுத்தது யாரு வாய் திறந்து சொல்லுங்க. இப்ப, நீங்க எப்படி பஸ்ஸில் வருகிறீர்கள். இங்கிருந்து, கோயம்பேடு போனாலும் எங்கே? போனாலும் ஓசீ பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என குறிப்பிட்டு இருந்தார். அமைச்சர் பொன்முடியின் இந்த கருத்து தமிழக பெண்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொன்முடிக்கு எதிரான கண்டன குரல்கள் குவிய துவங்கின. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் பொன்முடியின் கருத்திற்கு கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, ஓசி பஸ் பயணம் எங்களுக்கு வேண்டாம் என தமிழக பெண்கள் போர் கொடி உயர்த்தினர். அந்த வகையில், பஸ் கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டு பெண்கள் வாக்குவாதம் செய்த காணொளிகள் இணையத்தில் வைரலாக துவங்கின. இந்த சம்பவத்தின் தாக்கம் இன்று வரை குறைந்தபாடில்லை.
இப்படிப்பட்ட சூழலில், நியூஸ் தமிழ் ஊடகத்தின் நிருபர் ஜெபர்சன், போக்குவரத்து கழக அதிகாரியை கைப்பேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு, இலவச பேருந்து பயணம் குறித்த கேள்வியை முன்வைத்து இருக்கிறார். இதற்கு, போக்குவரத்து கழக அதிகாரி, டிக்கெட் வேண்டும் என பெண்கள் காசு கொடுத்தால் வாங்கி கொள்ளுமாறு அனைத்து டிப்போவிற்கும் தாங்கள் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
இலவச பேருந்து பயணம் என்று அறிவித்து விட்டு, தமிழக பெண்களை ஓசி பயணம் என்று இழிவுபடுத்தி விட்டு தற்போது காசு கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுவது எந்தவகையில் நியாயம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.