மழை நீரை அகற்றாவிடில் மேயருக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பேன் என பத்திர பதிவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்பு, கழக கண்மணிகளில் தொடங்கி அரசு அதிகாரிகள் வரை தி.மு.க. தலைவரை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், தமிழகத்தில் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனிடையே, நீங்க பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண்மணி தானே என்று பொது மேடையிலேயே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனை தொடர்ந்து, வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை ஆற்றின் குறுக்கே 40 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படவிருக்கிறது. இதற்கான, அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி நூல்துறை அமைச்சர் காந்தி, அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசியபோது, “பொன்னை ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் சேதமடைந்ததால் புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. விரைவில் காட்பாடி ரயில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்காக இவ்வளவு செய்தும் நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. இருந்தாலும் நான் உங்களுக்கு என் கடமைகளை செய்து வருகிறேன். தற்போது கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு 1,000 ரூபாய் வழங்கி வருகிறோம். அதேமாதிரி எங்களுக்கு தர்றதா சொன்ன 1,000 ரூபாய் எங்கேன்னு கேட்குறீங்களா? இப்பத்தான் சில்லரை மாத்திக் கொண்டிருக்கிறோம். விரைவில் 1,000 ரூபாய் வழங்குவோம். உனக்கு 1,000 ரூபாய், ங்கொம்மாளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான்” என்று கூறியிருந்தார். அமைச்சரின் இந்த அருவருக்கதக்க பேச்சு அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தன. இப்படியாக, தி.மு.க.வை சேர்ந்த மூத்த அமைச்சர்கள் சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் கோவத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.
இதனிடையே, தி.மு.க.வின் மூத்த தலைவரும் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சருமாக இருப்பவர் மூர்த்தி. இவர், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள அய்யர் பங்களா பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களில் ஆய்வு செய்து இருக்கிறார். இதையடுத்து, தனது வீட்டின் பின்புறம் உள்ள பகுதிகளில் குளம் போல் தேங்கி இருந்த மழைநீர் இடத்தையும் அவர் பார்வையிட்டு இருக்கிறார். இதனால், கடுப்பான அமைச்சர் இதற்கு உரிய தீர்வினை நீங்கள் ஏற்படுத்தி தராவிடில் மேயர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நான் உண்ணாவிரதம் இருப்பேன் என அங்கிருந்தவர்களிடம் அமைச்சர் தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.