பெண் பத்திரிகையாளரின் ட்விட்டர் பதிவு:  அமைச்சர் ஆவேசம்!

பெண் பத்திரிகையாளரின் ட்விட்டர் பதிவு: அமைச்சர் ஆவேசம்!

Share it if you like it

தீபாவளியையொட்டி தமிழகத்தில் எவ்வளவு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை பிரபல பெண் பத்திரிகையாளர் சங்கீதா கந்தவேல் வெளியிட்டு இருந்தார். இதற்கு, சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடருவேன் என்று மிரட்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா தொற்று தமிழகத்தில் உச்சத்தில் இருந்த வேளையில், வழிபாட்டு தலங்களுக்கு தடை விதித்தது தி.மு.க. அரசு. அதே வேளையில், கொரோனா தொற்று பரவ 100% வாய்ப்பு இல்லாத மதுபான கடைகளுக்கு மட்டும் அனுமதி. இந்தியாவிலேயே ஏன்? இந்த உலகத்திலேயே ஸ்டாலினை தவிர வேறு யாராலும் இதுபோன்று சிந்திக்க முடியாது என தமிழக அரசை நெட்டிசன்கள் அந்நாட்களில் வெகுவாக பாராட்டி இருந்தனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஒரு சொட்டு மது தமிழகத்தில் இருக்காது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த அரசு, அமைந்து ஒன்றரை ஆண்டுகளை பூர்த்தி செய்து இருக்கிறது. இருப்பினும், பூரண மதுவிலக்கு தமிழகத்தில் வந்தபாடில்லை. அதே சமயத்தில், குடிப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக தமிழகத்தில் உயர்ந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், பிரபல பெண் பத்திரிகையாளர் சங்கீதா கந்தவேல் தனது ட்விட்டர் பதிவில், தீபாவளி அன்று மட்டும் தமிழக அரசு டாஸ்மாக் மூலம் ரூ. 244.08 கோடிக்கு மது விற்பனை செய்துள்ளது. அதே வேளையில், கடந்த மூன்று நாட்களில் மட்டும் தமிழக அரசு 708.29 கோடி சம்பாதித்துள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

சங்கீதா தெரிவித்த கருத்திற்கு, தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதில் இதோ ;

நிர்வாகத்திடம் கூட முழு விவரம் வராத நிலையில், பொதுமக்களிடம் ‘விற்பனை விவரம்’ என பொய்யான தகவல்களைச் சேர்க்கிறீர்கள். உண்மையிலேயே நெறிமுறையற்றது. தவறான செய்திகளை பரப்பி அரசுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

பெண் பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசிய செந்தில் பாலாஜிக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கொடுத்த பதிலடி ;

கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா?

சாராயம் விற்றுப் பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரமிருந்தால், மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும்?

கோபாலபுரத்தின் குடும்ப தொலைக்காட்சியான சன் நியூஸ் இந்த சாராய விற்பனை மூலம் வந்த வருமானத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது. அவர்கள் மீதும் வழக்கு தொடுப்பீர்களா? அவர்கள் மீது வழக்கு தொடுத்தாலும், உங்கள் நடவடிக்கைகளுக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் பத்திரிகையாளர்களை விட்டு விட்டு என் மீது வழக்குத் தொடுங்கள் சாராய அமைச்சரின் இந்த நடவடிக்கை ஸ்டாலின் வழிகாட்டுதலின் பெயரில் நடக்கிறதா அல்லது சாராய அமைச்சரே தன்னிச்சையாக செயல்படுகிறாரா?


Share it if you like it