தி.மு.க அமைச்சர்களிடையே தொடரும் வார்த்தை போர் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர், பொறுப்புக்கு வந்த பின்பு கட்சியையும், ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாமல் இன்று வரை திணறி வருகிறார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, அமைச்சர்கள் தங்களது மனம் போன போக்கில் பேசி வருகின்றனர். இதுதவிர, ஓட்டு போட்ட மக்களின் உணர்வுகளையும், உள்ளத்தையும் காயப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இதன்காரணமாக, ஆளும் தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் கொந்தளிப்பில் இருந்து வருகின்றனர். இதனால், தமிழக முதல்வருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தி.மு.க.வின் பொதுக்குழு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலந்து கொண்ட முதல்வர், என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. நம் கட்சியை சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு புது பிரச்சனையை கொண்டு வந்து விடுவார்களோ என்ற அச்சத்துடனே தினமும் நான் கண் விழிக்கிறேன் என்று கதறி இருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. அமைச்சர்களிடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. அதாவது, மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, பி.டி.ஆர் பேசும் போது ; மக்களுக்கு சேவை செய்யும் துறையாக கூட்டுறவுத்துறை மாற வேண்டும். கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும் வரலாற்று ரீதியாக சிறப்பாக உள்ளது. திறன் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். கூட்டுறவுத்துறையில் கடத்தல்கள், ரெய்டுகள் அதிகரித்திருப்பதாக செய்திகள் வருகின்றன. நிதியமைச்சராக கூட்டுறவுத்துறை செயல்பாட்டில் எனக்கு திருப்தி இல்லை என்று கூறியிருந்தார்.
அதேபோல, தி.மு.க. மூத்த தலைவரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், சில கூட்டுறவுத்துறை சங்கங்களின் தலைவர்களும், செயலாளர்களும் சேர்ந்தால் இந்தியாவை கொள்ளையடித்து விடுவார்கள் என்று கூறியிருந்தார். இப்படியாக, இரு அமைச்சர்களும் மாறி மாறி கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தனர்.
இதனால், உஷ்ணமான கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இரு அமைச்சர்களுக்கும் இவ்வாறு பதிலடி கொடுத்து இருக்கிறார் ;
கூட்டுறவுத்துறை திட்டங்கள் மூலம் மக்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம், ரேசன் கடையே தெரியாதவர்கள் திருப்தி அடையவில்லை என சொல்வது பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களிடையே இப்படி வார்த்தை போர் நடைபெற்று வரும் சூழலில் இதுகுறித்து பேசாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏன்? கள்ள மெளனமாக இருக்கிறார் என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.