நான் புனிதராக இருந்தால், வாயில் வெண்ணெய் தடவி படுக்கப் போட்டு இருப்பீர்கள் என தி.மு.க அமைச்சர் கே.என். நேரு பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க மூத்த தலைவரும் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருப்பவர் கே.என். நேரு. இவரின், மேடை பேச்சுகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புகள் பெரும்பாலும் சர்ச்சையில் முடிவது வழக்கம். அந்த வகையில், தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் விலக்கு கேட்போம் அல்லது மாணவர்களை பிட் அடிக்க அனுமதிப்போம் என்று இவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாகி இருந்தது. அதன்பின், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இவர் அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து, திசைகாட்டு திருச்சி என்ற இணையவழி வேலை வாய்ப்பு முகாம் சமீபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட கே.என்.நேரு பீகார் காரனுக்கு மூளை கிடையாது என்று இவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனை ஒருமையில் விமர்சனம் செய்து இருந்தார். அமைச்சரின் இந்த கருத்திற்கு தோழர்கள் தங்களது கடும் எதிர்ப்பினை பதிவு செய்யாமல் வழக்கம் போல கப்சிப்.
இந்நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கட்சியின் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பொன்மலைப்பட்டியில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அமைச்சர் நேரு கூறியதாவது: ஓர் ஆண்டில், 100 கோடி ரூபாய் சம்பாதித்ததாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அப்படி நான் சம்பாதிக்கவில்லை, அப்படி சம்பாதித்தால், அது மக்களுக்கு செலவழிக்கப்படும். நேரு புனிதர் அல்ல, என்று திருவெறும்பூரில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளீர்கள். நான் புனிதராக இருந்தால், வாயில் வெண்ணெய் தடவி படுக்கப் போட்டு இருப்பீர்கள். புனிதராக இருக்க நாங்கள் என்ன சங்கர மடமா நடத்துகிறோம். அரசியலில் யார் தான் புனிதர் இருக்கிறார்கள்? என்று குறிப்பிட்டுள்ளார்.
காமராஜர், பசும்பொன்முத்து ராமலிங்க தேவர், கக்கன், ஓமந்தூரார் வாழ்க்கையை பின்பற்றி இருந்தால் நேர்மையான அரசியல் தலைவர்கள் யார்? என்பது இவர்களுக்கு தெரிந்திருக்கும். தி.மு.க.வினர் பெரும்பாலும் பின்பற்றுவது உதயநிதி, இன்பநிதி, கலாநிதி, தயாநிதி, கட்சிக்கு நிதி கொடுக்கவில்லை என்றால் ஒரே மிதி என்பது தானே இவர்களது கொள்ளை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.