குடிநீர் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது என முதல்வர் ஸ்டாலின் பெண்மணி ஒருவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு, அப்பெண்மணி பூமியில் இருந்து என பதில் அளித்துள்ள காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 24 – ஆம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள செங்காடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்பொழுது, கூட்டத்தில் குழுமியிருந்தவர்களிடம் குடிநீர் பிரச்சனை எப்படி இருக்கிறது என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு, ஆண்கள் சைடில் இருந்து பதில் வந்துள்ளது. ஆண்கள் எல்லாம் அமைதியாக இருங்கள். பெண்கள் பதில் சொல்லட்டும் என முதல்வர் கூறியதை அடுத்து, பெண்மணி ஒருவர் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஐயா என்று பதில் அளித்துள்ளார். இதையடுத்து, உங்களுக்கு குடிநீர் எங்கிருந்து வருகிறது என முதல்வர் அப்பெண்மணியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு, அவர் பூமியில் இருந்து என பதில் அளித்துள்ளார் தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சமயத்தில் இதேபோன்று ஆண்கள், பெண்கள் என பலர் குழுமியிருந்த கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்பொழுது, அக்கூட்டத்தில் இருந்த பெண்மணி ஒருவர் தனது குறைகளையும், தங்கள் பகுதிக்கு தேவையானவற்றை கன்னட மொழியில் தெரிவித்துள்ளார். இதனை, உன்னிப்பாக கவனித்து குறிப்பெடுத்து கொண்டார் ஸ்டாலின். இதையடுத்து, கேள்வி கேட்ட அப்பெண்மணிக்கு தெலுங்கு மொழியில் ஸ்டாலின் பதில் அளித்த சம்பவம் தான் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது.