மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம் முன்பு அரசு ஊழியர் நியாயம் கேட்ட காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பூரண மதுவிலக்கு, சிலிண்டருக்கு ரூ.100 மானியம், பழைய ஓய்வூதியத் திட்டம் என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூறியிருந்தது. ஆட்சியில், அமர்ந்து ஒரு வருடத்தை கடந்து விட்ட பின்பும் கூட, தங்களது வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் இன்று வரை ஸ்டாலின் அரசு திணறி வருகிறது. அந்த வகையில், பழைய ஓய்வூதிய முறைப்படி பென்ஷன் வழங்குவது சாத்தியமற்றது என சட்டப் பேரவையில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அண்மையில் கூயிருந்தார்.
தி.மு.க. ஆட்சியில் நிச்சயம் பென்ஷன் கிடைக்கும் என அரசு ஊழியர்கள் காத்திருந்தனர். ஆனால், அமைச்சரின் கருத்து, பெருத்த ஏமாற்றத்தை அவர்களுக்கு வழங்கியிருந்தது. இதையடுத்து, அரசு ஊழியர்கள் தி.மு.க. அரசிற்கு எதிராகவும், அமைச்சருக்கு எதிராகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், மின்வாரிய ஊழியர் ஒருவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம் முன்பு வைத்த ஒப்பாரியில் கூறியதாவது ;
“ ஒரு சரண்டர் இல்லை’ டி.ஏ., அரியர், இல்லை. எந்த விதமான பண உதவியும் வாரியம் வாயிலாக கிடைப்பதில்லை. என்ன… உங்கள் மகனுடைய ஆட்சி இப்படி உள்ளது. கேட்டால், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பதவி ஏற்கிறார். நாங்கள் யாரிடம் போய் கேட்பது? நீங்கள் இருக்கும்போது எந்த அரசு ஊழியராவது கண்ணீர் வடித்தார்களா? உங்கள் ஆட்சியில் தான் அரசு ஊழியர்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்தீர்கள். ஆனால், உங்கள் மகன் இன்று எங்களை பாடாய்படுத்தி கொண்டு இருக்கிறார்.
நீங்கள் தான் எங்களுக்கான வழிமுறையை அமைத்து கொடுக்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் எங்கள் உயிரை பணயம் வைத்து அவ்வளவு வேலை செய்தோம். எங்களை முன்களபணியாளர்களாக அறிவித்தார்களா அதுவும் கிடையாது. என மின்வாரிய ஊழியர் ஒருவர் புலம்பும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.