சேராத இடம் சேர்ந்து… தி.மு.க. எம்.பி. கதறல்!

சேராத இடம் சேர்ந்து… தி.மு.க. எம்.பி. கதறல்!

Share it if you like it

பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் தி.மு.க.விடம் கூட்டணி அமைத்தது குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தி இருப்பது ஆளும் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய ஐனநாயக கட்சியின் நிறுவனராக இருப்பவர் பாரிவேந்தர். இவர், 2019 – ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். இதையடுத்து, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின், நடைபெற்ற 2021 – ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு தனது ஆதரவினை வழங்கி இருந்தார்.

தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைத்து ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. ஆனால், மக்கள் விரும்பும் அரசாக ஆளும் கட்சி செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டினை மக்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். கொலை, கொள்ளை, பாலியல் குற்றச்சாட்டு, வழிப்பறி என சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரித்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன், தி.மு.க. அன்று சொன்னதை இன்று மாற்றிப் பேசுவது ஏற்புடையதல்ல. எட்டுவழிச் சாலைத் திட்டம், கோவை சூயஸ் குடிநீர் திட்டம், டாஸ்மாக் கடைகள், ஆறுபேர் விடுதலை, நீட் விலக்கு, இஸ்லாமியச் சிறைவாசிகள் விடுதலை எனப் பல வாக்குறுதிகளை தி.மு.க கொடுத்தது. முன்பு ஒன்று பேசிவிட்டு, தற்போது மாறுபட்ட கருத்தைச் சொல்வது ஏற்புடையதல்ல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனில், மக்கள் மத்தியில் எதிர்ப்பு உண்டாகும் என நேற்றைய தினம் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்திய ஐனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், எம்.பி பதவி எனது அடையாளத்தின் சிறு துளி. இதற்காக நான் போகாத இடத்திற்கு போய் இருக்க கூடாது. நான் தனித்து போட்டியிட்டிருந்தால் கூட 10,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பேன். கூட்டணியில் சேர்ந்ததை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார்.

தி.மு.க. கூட்டணியில் உள்ள தலைவர்கள் தமிழக முதல்வரை தொடர்ந்து சாடி வருவது கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it