‘ஜாக்டோ – ஜியோ’ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டு இருக்கும் போதே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாரை சாரையாக வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி தெளித்தது. விடியல் கிடைக்கும் என நம்பி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் ஸ்டாலினை ஆதரித்தனர். இதையடுத்து, அவர் முதல்வராக பதவி ஏற்றார். தி.மு.க. அரசு அமைந்து ஒரு வருடத்தை பூர்த்தி செய்து இருக்கிறது. ஆனால், விடியல் அரசு கொடுத்த வாக்குறுதிகள் தான் பெரும் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், சென்னையில் நேற்றைய முன்தினம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அம்மாநாட்டில், கலந்து கொண்ட அனைவரும் முதல்வரை புகழ்ந்து பேசினர். மேலும், முந்தைய ஆட்சியாளர்களை வசைபாடி இருந்தனர். இதையடுத்து, பேசிய முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல, உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார். மேலும், தமிழக அரசின் நிதி நிலை சரியானதும் மற்ற அறிவிப்புகள் வரும் என்று தெரிவித்து இருக்கிறார். இதனால், உஷ்ணமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதல்வர் பேசிக்கொண்டு இருக்கும் போதே மாநாட்டில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து, ஜாக்டோ – ஜியோவின் முக்கிய நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினர்.
அனைத்து பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்: பகுதி நேர ஆசிரியர்களுக்கு விடியல் தருவோம் என்று கூறி விட்டு, மேலும் இருளில் தவிக்க விட்டு விட்டனர். இந்த ஆட்சி வந்த 16 மாதங்களில், பல முறை மனு அளித்தோம். பணி நிரந்தரம் என்ற செய்தியை முதல்வர் அறிவிக்காமல் ஏமாற்றி விட்டார்.
பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க தலைவர் ஜேசுராஜா: 11 ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேட்டு போராடுகிறோம். ‘பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம்’ என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின், பணி நிரந்தரத்துக்கான எந்த நடவடிக்கையையும், முதல்வர் ஸ்டாலின் எடுக்கவில்லை; மாநாட்டிலும் அறிவிக்கவில்லை. ஜாக்டோ – ஜியோ மாநாடு ஏமாற்றம் அளிக்கிறது.
கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார்: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து குறித்து, முதல்வர் அறிவிக்கவில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்ட கோரிக்கை குறித்து, நம்பிக்கையான அறிவிப்பு வெளியாகவில்லை. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை தீர்ப்பது குறித்தும் பேசவில்லை. இந்த மாநாடு எங்களை ஏமாற்றி விட்டது.
நெடுஞ்சாலைத் துறை பட்டய பொறியாளர்கள் சங்க பொதுச்செயலர் மாரிமுத்து:
அரசு ஊழியர்களிடம், புதிய ‘பென்ஷன்’ திட்டத்தின்படி பிடித்தம் செய்த தொகையும், ஊழியர்களுக்கு அரசு பங்களிக்க வேண்டிய தொகையும், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது.