சீமான் தமிழ் தேசிய பிரிவினைவாதக் கொள்கையை கைவிட்டு, பகுத்தறிவுடன் சிந்தித்தால் பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கு வரலாம் என பா.ஜ.க. மூத்த தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. ஆட்சியின் ஒன்பது ஆண்டுக்கால சாதனை விளக்க கண்காட்சியை சிவகங்கையில் பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா திறந்து வைத்தார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு கூறினார் : “சீமான் தமிழ் தேசிய பிரிவினைவாதக் கொள்கையை கைவிட்டு, பகுத்தறிவுடன் சிந்தித்தால் பா.ஜ.க-வுடன் நெருங்கி வரலாம். சீமான் பேசிய கருத்துகளை நான் முன்பே பேசியிருக்கிறேன். தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதம். இந்திய தேசியமே ஒற்றுமையை உண்டாக்கும், மற்றபடி திராவிடத்தை அவர் எப்படி ஏற்றுக்கொள்ளவில்லையோ, அதுபோல் நானும் ஏற்றுக்கொள்ளவில்லை.
நாட்டின் குடிமகன் ஒவ்வொருவரும் அரசியலுக்கு வரலாம். அந்த வகையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அதே நேரம் அரசியலில் ஈடுபட திரைப்பட பாப்புலாரிட்டி மட்டும் போதாது என்கிற திருமாவளவனின் கருத்திலும் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியின் உடல்நிலை சந்தேகமளிக்கும் வகையில் இருக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரது படம் வெளியிடாதது ஏன் என்று கேள்வி கேட்ட ஸ்டாலின், இன்று செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து படம் வெளியிடாதது ஏன் செந்தில் பாலாஜி சிறைக்குப் போவதற்கு ஸ்டாலின்தான் காரணம். ஸ்டாலினின் சபதம் நிறைவேற அமலாக்கத்துறையினர் பணியாற்றுகின்றனர்.
மெட்ரோ ரயில் ஊழல் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ விசாரணை கோரினால், ஸ்டாலினால் மூடப்பட்ட கதவுகள் தூள் தூளாகிவிடும். சிதம்பரம் தீட்சிதர்கள்மீது பொய்வழக்கு போடப்பட்டிருக்கிறது. அமைச்சர் சேகர் பாபுவின் அடாவடித்தனம் இன்னும் மூன்று மாதங்களில் முடிந்துவிடும். ஏனென்றால் தி.மு.க அரசு நீடிக்காது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மக்களைத் திரட்டி 46 கோயில்களுக்குள் சென்று அறநிலையத்துறை அதிகாரிகளை வெளியேற்றுவோம்.
2014-ல் இந்தியாவின் பிரதமராக மோடி வரவில்லையென்றால், பாகிஸ்தான், இலங்கையைவிட இந்தியா பிச்சைக்கார நாடாக மாறியிருக்கும். நெல்லையில் பிஷப் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. ஞானதிரவியம் எம்.பி-யிடம் விளக்கம் கேட்டால் மட்டும் போதாது அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது, கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள், கார்ப்பரேட் முதலாளிகளின் தனி விமானத்தில் பயணித்தனர். இவர்கள் எப்படி நேர்மையான ஆட்சியைத் தருவார்கள்… அவர்களில் யார் பிரதமர் என்பதைக்கூட முடிவு செய்யவில்லை, இரண்டாவது கூட்டம் நடப்பது சந்தேகம்தான்” என்று கூறியிருந்தார்.