கஷ்டத்தில் உதவி செய்த மூதாட்டியிடம் தனது கைவரிசையை காட்டிய தி.மு.க. நிர்வாகியின் செயலுக்கு பலர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொதுவாக சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையிலேயே இருக்கும். இதுதவிர, கழக கண்மணிகளின் அட்டூழியங்கள் மற்றும் அடாவடிகள் தொடர்கதையாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தால் அவர்களுக்கு நீதி கிடைக்காது என்பதே பலரின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த சம்பவத்தை குறிப்பிட்டு சொல்லலாம்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு அருகே உள்ள கிராமம் வக்கம் பாளையம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாம்மாள். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த தி.மு.க.வின் நெசவாளர் அணி பிரிவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆறுமுகம், அவரது தந்தை மணி, தாய் பத்மாவதி உள்ளிட்டவர்கள் நேரில் சென்று கடன் கேட்டு இருக்கின்றனர். அவர்களின், வலியை உணர்ந்த பாட்டி 3 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட தனது வீட்டின் பத்திரத்தை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
வீட்டின் பத்திரத்தை வைத்து தி.மு.க. நிர்வாகி கடன் பெற்று இருக்கிறார். இதையடுத்து, பாப்பாம்மாளிடம் பெற்ற கடனை திருப்பி கொடுக்காமல், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆறுமுகம் ஏமாற்றி வந்து இருக்கிறார். இந்நிலையில், மூதாட்டியின் அன்பு மகளுக்கு திடீரென புற்று நோய் ஏற்பட்டு இருக்கிறது. ஒருபுறம், அரசு மருத்துவமனையில் இருக்கும் மகளை பார்த்து கொண்டு, மறுபுறம் கொடுத்த கடனை வாங்க முடியாமல் மூதாட்டி திணறி இருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு பாப்பாம்மாள் சென்று இருக்கிறார். அப்போது, தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும், தி.மு.க. நிர்வாகியிடம் தாம் ஏமாற்றம் அடைந்தது குறித்து, அங்கிருந்த அரசு ஊழியர்களிடம் கண்ணீர் மல்க கதறி அழுதபடி புகார் தெரிவித்த சம்பவம், கல் நெஞ்சையும் கரைய வைப்பது போல் இருக்கிறது. சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த யாரோ ஒருவர் இதனை தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.