தமிழகத்தில், பா.ஜ.க.வின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேஜஸ்வி சூர்யா தி.மு.க.வை வெளுத்து வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பா.ஜ.க. மூத்த தலைவரும், வழக்கறிஞருமாக இருப்பவர் செல்வி. இவர், தமிழக பா.ஜ.க. சிந்தனையாளர்கள் அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். அந்தவகையில், இவரது தலைமையில் கடந்த டிச., 9 – ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள், பத்திரிகையாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக, பா.ஜ.க. யுவ மோர்ச்சாவின் தேசிய தலைவரும், பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா கலந்து கொண்டார். இதையடுத்து, அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ;
தமிழகத்தில் தோன்றிய நீதிக்கட்சியே, இன்று தி.மு.க.,வாக உருமாறியுள்ளது. திராவிட இனவாதம், மாநில பிரிவினைவாதத்தை முன்வைத்த தி.மு.க., இன்று ஒரு குடும்பத்தின் பிடிக்குள் வந்து விட்டது. தங்களின் அரசியல் வெற்றிக்காக, மக்களை ஆரியம், திராவிடம் என இனத்தின் அடிப்படையிலும், ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் மொழியின் அடிப்படையிலும், தமிழகத்தில் பிரிவினைவாதத்தை திராவிட இயக்கம் விதைத்து வருகிறது என்று குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.