சென்னை: அரசு பள்ளிகளுக்கு நன்கொடை கேட்கும் விழாவை, தடபுடல் விருந்துடன் நட்சத்திர ஹோட்டலில் நடத்தியதற்கு மூன்று கோடி செலவு காட்டப்பட்டு இருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறை நடப்பு நிதியாண்டு ரூ. 35, ஆயிரத்து 839 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளது. எனினும், நிதி பற்றாக்குறை இருப்பதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து, அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் வண்ணம் நன்கொடை தாருங்கள், நிதியுதவி செய்யுங்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக, ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ எனும் அறக்கட்டளை வழியாக மக்களிடம் நன்கொடை கேட்கும் நிகழ்ச்சி கடந்த டிச., 19 தேதி சென்னை, கிண்டியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா தொழில் நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டன. நிகழ்ச்சியின் நிறைவாக, தடல் புடலாக விருந்து நடைபெற்றது. 100 வகை உணவுகள் பரிமாறப்பட்டன. அந்த வகையில், நூடுல்ஸ் போன்ற ‘சைனீஸ்’ உணவுகளுடன், மட்டன், சிக்கன், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
’நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் நிகழ்ச்சிக்கு மட்டும் ரூ. 3 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இதற்கான, செலவினை தமிழக பாடநூல் கழகம் வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.