தி.மு.க. கவுன்சிலரின் கணவர் சிறு வியாபாரிகளிடம் மாமூல் கேட்டுள்ளார். இதனை, கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் சென்னை வண்ணாரப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில், விடியல் ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த, அரசு பொறுப்புக்கு வந்து 16 மாதங்களை கடந்து விட்டது. எனினும், சட்டம் ஒழுங்கு பல்லிளிக்கும் நிலையிலேயே இருந்து வருகிறது. எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று வரும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகமே பொள்ளாட்சியாக மாறி வருவதாக பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கட்டுபாட்டில் இல்லை என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமான, சம்பவங்களே தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே, சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் பகுதி 51 -வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்சனா. இவருடைய கணவர் ஜெகதீசன். இவர், சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தர மறுக்கும் நபர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிரட்டுவது, தனது அதிகார பலத்தை காட்டுவதுமாக இருந்துள்ளார். இதனை, கண்டித்து சாலையோர வியாபாரிகள் வண்ணாரப்பேட்டை சிமெண்டரி சாலையில் அண்ணா நீரேற்று நிலையம் அருகே, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் வியாபாரிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வியாபாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெகதீன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே, ஜெகதீசன் தான் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலர்களை ஆபாசமாக திட்டியவன் என்பது குறிப்பிடத்தக்கது.