இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க. மீண்டும் பறித்து கொண்டதை தொடர்ந்து அக்கட்சியை சேர்ந்தவர்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2019 – ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதே, கூட்டணி 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் தனது வெற்றியை உறுதி செய்து இருந்தன. அதன் அடிப்படையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கூட்டணி கட்சிகள் கேட்டு கொண்டபடி நகராட்சி, பேரூராட்சி, பதவிகளை தி.மு.க. விட்டு கொடுத்தது.
அந்த வகையில், தி.மு.க. பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் தி.மு.க.வினர் போட்டி வேட்பாளர்களை களம் இறக்கி வெற்றி பெற்றனர். அந்த வகையில், கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. கடந்த மார்ச் மாதம் 4- ஆம் தேதி நடைபெற்ற தலைவருக்கான, மறைமுக தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த புவனேஸ்வரி வெற்றி பெற்றார். தி.மு.க. கவுன்சிலர்கள் எங்களை மோசம் செய்து விட்டனர் என கம்யூனிஸ்ட்கள் ஆர்ப்பாடம் செய்தனர். இதனால், உஷ்ணமான கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்வரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து, கூட்டணி கட்சிகளின் இடங்களில் வெற்றி பெற்ற, தி.மு.க.வினர் உடனே பதவி விலக வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இது வெறும் கண்துடைப்பு நாடகம் என பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து இருந்தன. இதையே, அரசியல் நோக்கர்களும் தெரிவித்து இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், புலியூர் பேரூராட்சி தலைவர் பதவியை புவனேஸ்வரி ராஜினாமா செய்து இருந்தார். இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் விதமாக மீண்டும் மறைமுக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கு, தி.மு.க. கவுன்சிலர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதையடுத்து, புவனேஸ்வரி மீண்டும் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை, கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் கலாராணி பேரூராட்சி அலுவலக வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார். இச்சம்பவம், கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.