இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ள மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக ஜீனியர் விகடன் செய்தி வெளியிட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு பொதுமக்கள் அச்சத்துடனும், பயத்துடனும் வாழும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு, சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது என்பதே நிதர்சனம். சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தி.மு.க. வட்டச் செயலாளர் செல்வம் சமீபத்தில் மர்ம கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, சென்னையில் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக நடுரோட்டில் உயிருக்கு போராடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இப்படியாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சீர்கெட்டு வருகிறது.
இதனிடையே, தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கண்ட்ரோலில் இல்லை, என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், பல்வேறு குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதுஒருபுறம் இருக்க, மதுவிற்கும், கஞ்சாவிற்கும், இளைஞர்கள் பலர் தொடர்ந்து அடிமையாகி வருகின்றனர். இதன்காரணமாக, அதிக குற்றச்செயல்கள் தமிழகத்தில் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, போன் செய்தால், வீட்டிற்கே வந்து கஞ்சா வழங்கும் அவலநிலையும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2021 – ஆம் ஆண்டு அதிக குற்றங்கள் நடந்த மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாகவும், 31 நாட்களில் 133 படுகொலை நிகழ்ந்துள்ளது என ஜீனியர் விகடன் பகீர் ஆய்வு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.