பகுதி நேர ஆசிரியர்களை பணி நீக்கம் செய்துள்ள தி.மு.க. அரசிற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியில் கூறியதாவது;
அரசுத்துறை நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும். இதற்கு, திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் என்று பெயரிடப்படும். தலைவர் கலைஞர் அவர்களின் புகழ்பெற்ற வாசகம் உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கும் அது சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம். அவர் வழியில் நானும் சொன்னதைச் செய்வேன். செய்வதை தான் சொல்வேன் என்று வாக்குறுதியை ஸ்டாலின் வழங்கி இருந்தார்.
தி.மு.க. ஆட்சி அமைந்து ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. விடியல் அரசு கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகள் இன்று வரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதே நிதர்சனம். இதனிடையே, பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கைகளை முன்வைத்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதியை மறந்து இப்பொழுது அவர்களை பணிநீக்கம் செய்துள்ளது இந்த திறனற்ற திமுக அரசு. ஆசிரியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய இந்த அரசின் போக்கு கண்டனத்துக்குரியது என்று தனது எண்ணத்தையும் அதுகுறித்தான காணொளியையும் வெளியிட்டு இருக்கிறார்.