தேர்தல் சமயத்தில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என வேல்முருகன் கேள்வி எழுப்பி இருக்கும் சம்பவம் ஆளும் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனராக இருப்பவர் வேல்முருகன். இவர், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் நின்று பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். தி.மு.க.வின் கூட்டணியில் இருந்தாலும், விடியல் ஆட்சியில் நடக்கும் அவலங்களை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். இதன்காரணமாக, தி.மு.க. மேலிடம் இவர் மீது கடும் உஷ்ணத்தில் இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்;
தி.மு.க. அன்று சொன்னதை இன்று மாற்றிப் பேசுவது ஏற்புடையதல்ல. எட்டுவழிச் சாலைத் திட்டம், கோவை சூயஸ் குடிநீர் திட்டம், டாஸ்மாக் கடைகள், ஆறுபேர் விடுதலை, நீட் விலக்கு, இஸ்லாமியச் சிறைவாசிகள் விடுதலை எனப் பல வாக்குறுதிகளை தி.மு.க கொடுத்தது. முன்பு ஒன்று பேசிவிட்டு, தற்போது மாறுபட்ட கருத்தைச் சொல்வது ஏற்புடையதல்ல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனில், மக்கள் மத்தியில் எதிர்ப்பு உண்டாகும் என தெரிவித்து இருக்கிறார்.