தி.மு.க தொண்டரின் உயிரை காப்பாற்றிய மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவருக்கு குவியும் பாராட்டு.
தி.மு.க ஆட்சியில் அக்கட்சி தொண்டர்களுக்கே நீதி கிடைக்காத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க தொண்டர் ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவர் டாக்டர். சரவணன் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற திமுக தொண்டரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினோம். இன்று (25.04.2022) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அதன்போது, திருஞானம் என்ற தி.மு.க தொண்டர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தன்மேல் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
பா.ஜ.க சார்பில் பொது பிரச்சனைகளுக்காக கோரிக்கை மனு அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றிருந்த நாங்கள் தீக்குளிக்க முயன்றவரை கண்டு அதிர்ச்சியடைந்தோம். உடனே அவரை தடுத்து நிறுத்தி, உடலில் தண்ணீர் ஊற்றி அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் உயிரை காப்பாற்றினோம்.
தீக்குளிக்க முயன்ற திருஞானம் அவர்களிடம் அவருடைய மகன் மாயக் கண்ணனுக்கு கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் திருமதி. கிரிஜா மற்றும் அவரது கணவர் ராஜா ஆகியோர் ருபாய் 3-லட்சம்/- வரை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாகவும் இதுகுறித்து, கடந்த 23.03.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் அளித்தும். இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனவே இன்று 25.04.2022 மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தீக்குளிக்க முயன்றேன் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், மதுரை தல்லாகுளம் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.