ஒட்டு மொத்த தி.மு.க.வும் வெகுவிரைவில் பா.ஜ.க பக்கம் வரும் என்று திருச்சி சிவாவின் மகன் சூர்யா பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின்பு அக்கட்சியின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் மூன்று கட்டமாக சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில், பல்வேறு இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் கணிசமான முறையில் வெற்றி பெற்று இருந்தனர். குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. அதேபோல, மதுரை மற்றும் சில மாநகராட்சி வார்டுகளிலும் பா.ஜ.க தனது முத்திரையை பதித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தற்பொழுது பா.ஜ.க. இருந்து வருகிறது. இதன்காரணமாக, இரு திராவிடக் கட்சிகளில் இருந்து பலரும் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில்தான், பாரம்பரியமாக தி.மு.க.வில் இருந்துவரும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா நேற்றைய தினம் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். இதையடுத்து, அவர் பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் ஒட்டு மொத்த தி.மு.க.வும் விரைவில் பா.ஜ.க.வின் பக்கம் வரும் என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
மு.க அழகிரியின் ஆதரவாளர்கள் எப்படி? தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்களோ, அதேபோன்று கனிமொழியின் ஆதரவாளர்களும் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சி சிவாவின் மகன் சூர்யா, கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்பது பல அரசியல் நோக்கர்களின் கருத்து. அண்ணனின் ஆதரவாளர்களை தொடர்ந்து, தங்கையின் ஆதரவாளர்களும் கட்டம் கட்டி ஒதுக்கப்பட்டு வருகின்றனர். பட்டத்து இளவரசர் உதயநிதியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டு வருவதாக விஷயம் தெரிந்தவர்கள் கூறி வருகின்றனர்.