அரசு மருத்துவமனைகளை பலவீனப்படுத்துவதோடு, சுகாதாரத்துறையின் அடிப்படை கட்டமைப்பையே சீர்குலைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறை அரசாணை எண் 151ஐ தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான சேவை இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது – அரசு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிரான சுகாதாரத்துறையின் அரசாணை எண் 151ஐ உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவம் உள்ளிட்ட ஒருசில முதுநிலை படிப்புகளைத் தவிர, பிறதுறைகளில் அரசு மருத்துவர்கள் பட்ட மேற்படிப்புகளை பயில்வதற்கான சேவை இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசு மருத்துவர்கள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து பயில தடைவிதிக்கும் திமுக அரசின் இந்த பிற்போக்குத்தனமான நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் எதிர்காலம் மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய பொதுமக்களின் நலனுக்கும் எதிராக அமைந்துள்ளது.
மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கும் வகையிலும் புதிய பணியிடங்களை உருவாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஏற்கனவே உள்ள படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிப்பது எந்தவகையில் நியாயம் ? என அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
எனவே, அரசு மருத்துவமனைகளை பலவீனப்படுத்துவதோடு, மாநிலத்தின் பொது சுகாதாரத்துறையின் அடிப்படை கட்டமைப்பையே சீர்குலைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறை அரசாணை எண் 151ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.