கேரள அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் கூட பதிவு செய்ய மறுக்கும் திமுக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு !

கேரள அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் கூட பதிவு செய்ய மறுக்கும் திமுக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு !

Share it if you like it

கூட்டணி தர்மத்தை விட மக்களின் நலனும், மாநில உரிமையையுமே முக்கியம் என்பதை இனியாவது உணர்ந்து, கேரள அரசின் புதிய அணைகட்டும் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தி தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு மாநில உரிமையையும் நிலைநாட்ட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறி அதனை தகர்க்க முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – புதிய அணையை கட்டி தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கேரள அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணைக்கு கீழே ரூ.1000 கோடி மதிப்பில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்திருந்த விண்ணப்பம் வரும் 28 ஆம் தேதி பரிசீலிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அதாவது திமுக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கேரளா மாநிலத்தில் நடைபெறும் ஒவ்வொரு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என்ற அம்மாநிலத்தின் பிடிவாதப்போக்கு அறிவிப்பை மெத்தனப் போக்கில் எதிர்கொண்டதன் விளைவாக தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமலே சுற்றுச்சூழல் அனுமதி கோரும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாக அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும் மத்தியக் குழு உறுதி செய்திருக்கும் நிலையில், அணை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறி புதிய அணை கட்டுவதோடு, ஏற்கனவே உள்ள அணையை தகர்க்க முயற்சிக்கும் கேரள அரசால் தேனி,மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கேரள அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் கூட பதிவு செய்ய மறுக்கும் திமுக அரசாங்கத்தால், தொடர் சட்டப்போராட்டம் நடத்தி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி இதயதெய்வம் அம்மா அவர்களால் நிலைநாட்டப்பட்ட மாநில உரிமையும் பறிபோகும் சூழல் உருவாகியிருப்பதாக அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, கூட்டணி தர்மத்தை விட மக்களின் நலனும், மாநில உரிமையையுமே முக்கியம் என்பதை இனியாவது உணர்ந்து, கேரள அரசின் புதிய அணைகட்டும் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தி தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு மாநில உரிமையையும் நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *